Kamala Harris: கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், அமெரிக்க வரலாற்றில் அந்த பெருமையை பெற்ற முதல் கருப்பின பெண் என்ற அங்கீகாரத்தை அடைவார்.






அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகல்: 


அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் தனது முடிவை திரும்பப் பெற்றுள்ளார். வயது மூப்பு காரணமாக அவர் எதிர்கொண்டு வரும் பிரச்னைகள் மற்றும் டொனால்ட் டிரம்பை தோற்கடிக்கும் திறன் ஆகியவற்றில், அவரது கட்சியினரே பைடனுக்கு எதிரான கருத்துகளை கூறி வந்தனர். இந்நிலையில், தான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனவும், அதிபர் பதவிக்கான வேட்பாளராக ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸை அறிவிக்க ஆதரவளிப்பதாகவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.


வரலாற்று சாதனை படைக்கப்போகும் கமலா ஹாரிஸ்?


ஜோ பைடன் விலகியதை அடுத்து,  துணை அதிபர் கமலா ஹாரிஸ், அதிபர் வேட்பாளர் ஆவதற்கான வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது. அப்படி நடந்தால்,  அமெரிக்க வரலாற்றில் அதிபர் வேட்பாளராக களமிரங்கும் முதல் கறுப்பின பெண் என்ற வரலாற்று சிறப்புமிக்க பெருமையை அவர் பெறுவார். இவர் இந்தியா வம்சாவளியை சார்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மூத்த ஜனநாயகக் கட்சி தலைவர்கள் கமலா ஹாரிஸிற்கு எதிராக கலமிறங்குவார்களா? என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதேநேரம்,  அவர் கட்சியின் பல முக்கிய நிர்வாகிகளின் தேர்வாகப் பரவலாகக் காணப்படுகிறார்.  மேலும், ஜனநாயக கட்சியே கமலா ஹாரிஸுக்காக வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அண்மையில் நடந்து முடிந்த கருத்து கணிப்புகளில், கமலா ஹாரிஸ் வேட்பாளராக களமிறங்கினால், ஜனநாயக கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளதாக முடிவுகள் கிடைத்துள்ளன. 


டிரம்ப் Vs கமலா ஹாரிஸ்?


கடந்த மாதம் குடியரசுக் கட்சியின் போட்டியாளரான டொனால்ட் டிரம்பிற்கு எதிரான தொலைக்காட்சி விவாதத்தில்,  மோசமான செயல்பாட்டிற்குப் பிறகு போட்டியிலிருந்து விலகுமாறு ஜனநாயகக் கட்சியினரே பைடனுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், அவர் விலகியுள்ளதால் டிரம்பிற்கு எதிராக கமலா ஹாரிஸ் களமிறங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அமெரிக்க அதிபர் தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் டிரம்ப் வென்று மீண்டும் அதிபர் ஆவாரா? அல்லது கமலா ஹாரிஸ் வேட்பாளராக களமிறங்கி வெற்றி வாகை சூடி அமெரிக்க வரலாற்றின் முதல் பெண் அதிபர், அதுவும் கறுப்பினத்தைச் சேர்ந்த பெண் அதிபர் என்ற சரித்திரத்தை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு உலகளவில் எழுந்துள்ளது.


யார் இந்த கமலா ஹாரிஸ்?


கடந்த ஜனவரி 2019 ஆம் ஆண்டு அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்த கமலா ஹாரிஸ், அதே ஆண்டு மார்ச் மாதத்தில் ஜோ பைடனை அதிபர் வேட்பாளராக ஆதரிப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து ஜனவரி 2021 ஆம் ஆண்டு அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்றார். இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண், முதல் கறுப்பின மற்றும் முதல் தெற்காசியப் பெண் இவர்தான். கமலா ஹாரிஸின் தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். தாய் இந்தியாவைச் சேர்ந்தவர். சான் பிரான்சிஸ்கோவின் மாவட்ட வழக்கறிஞராகவும், கலிபோர்னியா மாநிலத்தின் அட்டர்னி ஜெனரலாகவும் பணியாற்ற்யுள்ளார். இவர் அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்ற போது, ஒட்டுமொத்த இந்தியாவுமே பெருமை கொண்டது. குறிப்பாக அவரது தாயார் பிறந்த ஊரான தமிழ்நாட்டின் தஞ்சைப் பகுதியில் உள்ள பல கிராமங்கள் விழாக்கோலம் பூண்டிருந்தது. பல சமயங்களில் இந்தியா உடனான தனது உறவை, கமலா ஹாரிஸ் பெருமையாக வெளிப்படுத்தி உள்ளார்.