மைக்ரோசாப்ட் முடக்கத்தால் உலக நாடுகள் முழுவதும் திணறியது. விமான போக்குவரத்து முதல் ஒளிபரப்பு வரை, அனைத்து துறைகளும் ஸ்தம்பித்தன. ஆனால், இந்த மைக்ரோசாப்ட் செயலிழப்பால் சீனா பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்படாத சீனா: தொழில்நுட்ப கோளாறால் உலக நாடுகள் முடங்கிய போதிலும், சீன நாட்டின் விமான சேவையும் வங்கி சேவையும் பாதிக்கப்படவில்லை என சவுத் சைனா போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. தினசரி பணிகளுக்காக அந்த நாடு வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திராமல் இருந்ததே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
இருப்பினும், சீனாவில் உள்ள ஷாங்காயில் வெளிநாட்டு நிறுவனத்திற்காக பணிபுரிந்து வரும் பெண், இதுகுறித்து கூறுகையில், "மானிட்டரில் ப்ளூ ஸ்கிரீன் மட்டுமே தெரிவதாக எனது அலுவலகத்தில் உள்ளவர்கள் புகார் செய்தனர். விண்டோஸ் சரியாக லோட் ஆகவில்லை என திரையில் குறிப்பிடப்பட்டிருந்தது" என்றார்.
இணையத்தில் சில சர்வதேச ஹோட்டல்களை தேடும்போது சிக்கல்களை எதிர்கொண்டதாக சீனாவில் உள்ள மக்கள் சமூக வலைதளங்களில் புகார் தெரிவித்திருந்தனர். Xiaohongshu என்ற சீன சமூக வலைதளத்தில் தொழில்நுட்ப கோளாறு தொடர்பாக மக்கள் புகார் கூறியிருந்தனர்.
மைக்ரோசாப்ட் முடக்கத்திற்கு காரணம் என்ன? மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கியமான மென்பொருள்களில் ஒன்று கிளவுட். சாப்ட்வேர் மற்றும் விமான சேவை துறைகளில் கிளவுடின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது.
இந்த சூழலில், கிரவுட் ஸ்ட்ரைக் (CrowdStrike) காரணமாக மைக்ரோசாப்ட் கணினி முடங்கியுள்ளது. கிரவுட் ஸ்ட்ரைக் என்பது இணைய பாதுகாப்பு நிறுவனமாகும். விண்டோஸ் நிறுவனத்துடன் இணைந்து மேம்பட்ட பாதுகாப்பை வழங்குகிறது.
எப்போது எல்லாம் பிரச்னைகள் ஏற்படுகிறதோ அப்போது எல்லாம் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) மற்றும் மெஷின் லேர்னிங் மூலம் உடனடியாக அதற்கு தீர்வு காண்கிறது கிரவுட் ஸ்ட்ரைக். இப்படியிருக்க, கிரவுட் ஸ்ட்ரைக் அப்டேட் காரணமாக மைக்ரோசாப்ட் கணினி முடங்கியது.
இதன் தாக்கம் உலகம் முழுவதும் பல நாடுகளில் எதிரொலித்தது. அந்த வகையில், இந்தியாவில் கணினி முடக்கம் காரணமாக 192 விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது. அதோடு, விமானங்களை புக் செய்ய முடியாமலும், ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கு ரீபண்ட் பெற முடியாமலும் பயணிகள் தவித்தனர்.