பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அவரது மனைவி ஜில் பைடனும் முன்னதாக இங்கிலாந்து புறப்பட்டனர்.
முன்னதாக ராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வலம் செப்டெம்பர் 14ஆம் தேதி லண்டன், பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனைக்குத் தொடங்கியது.
இந்த ஊர்வலத்தில் அவரது பிள்ளைகள், பேரக்குழந்தைகள், குடும்ப உறுப்பினர் என அனைவரும் கலந்துகொண்டனர்.
குடும்பப் பிரச்னைகளைத் தாண்டி, ஹாரி - மேகன் தம்பதி இறுதி அஞ்சலி செலுத்த கலந்துகொண்டுள்ளது முன்னதாக கவனமீர்த்து பேசுபொருளானது.
இந்நிலையில் வெஸ்ட்மினிஸ்டர் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்குகள் வரும் செப்.19ஆம் தேதி வரை நடைபெற்று, தொடர்ந்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இங்கிலாந்து ராணியாகவும் காமன்வெல்த் நாடுகளின் தலைவராக நீண்ட காலம் பதவி வகித்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ஆம் தேதி மறைந்தார்.
வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் ராணியின் உடலுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேரில் அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததைத் தொடர்ந்து புதிய மன்னராக 73 வயது நிரம்பிய சார்லஸ் பொறுப்பேற்றிருக்கிறார்.
இந்நிலையில், துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன், ஜப்பானின் பேரரசர் நருஹிட்டோ, நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் உள்ளிட்டோர் ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்கின்றனர்.
மேலும், நெதர்லாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், டென்மார்க் மற்றும் ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளின் அரச குடும்ப உறுப்பினர்களும் இறுதிச் சடங்கில் அஞ்சலி செலுத்துகிறார்கள். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்கும், இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவிப்பதற்காகவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிரிட்டன் செல்கிறார்.