அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) கல்லூரி விழா ஒன்றில் இளம்பெண் ஒருவருக்கு டேட்டிங் அறிவுரை வழங்கும் வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் விவாதங்களைக் கிளப்பி உள்ளது.
கல்லூரி விழாவில் இளம்பெண் ஒருவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் நிலையில், ”தொடர்ந்து, நான் என் மகள்கள், பேத்திகளுக்கு சொன்ன மிக முக்கியமாக விஷயத்தை சொல்கிறேன்.
30 வயது வரை யாருடனும் சீரியசாக டேட்டிங் செல்லக்கூடாது” எனக் கூறுகிறார். அதிபரின் இந்தப் பேச்சால் ஆச்சரியமடையும் அப்பெண் தொடர்ந்து சரி என எதிர்வினையாற்றுகிறார்.
இந்த வீடியோ 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்று இணையத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
அதன்படி, ”அதிபர் ஜோ பைடன் தோள்களைத் தொட்டு பேசியதில் அப்பெண் அசௌகரியமாக உணர்கிறார்.. இது தவறான அணுகுமுறை” என்றும், மற்றொரு தரப்பினர் ”வேண்டுமென்றே இந்த வீடியோவை ஊதி பெரிதாக்குகிறார்கள், தாத்தா நிலையில் இருந்து இளைஞர்களிடம் பேசுபவரை எப்படி இவ்வாறு மோசமாகப் பேசுகிறீர்கள்” என்றும் கலவையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
வீடியோவில் அதிபரின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து அவரது பாதுகாவலர்கள் வீடியோ எடுக்கப்படுவதை கவனித்து, வீடியோ எடுப்பதை நிறுத்தக் கூறுவதும் பதிவாகியுள்ளதால், பாதுகாவலர்களின் செயலும் பேசுபொருள் ஆகியுள்ளது.
இதேபோல் முன்னதாக அமெரிக்க கல்வி அசோசியேஷன் கூட்டத்தில் தன்னை விட 18 வயது இளைய பெண் உடன் தான் கொண்டிருந்த நட்பு குறித்து பேசியதும் சர்ச்சைகளைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.