நிம்ரோஸ் மாகாணத் தலைநகர் ஸ்ராஞ் நகரைக் கைப்பற்றிய 24 மணிநேரத்திற்குள், ஆப்கானிஸ்தான் நாட்டின் இரண்டாவது மாகாணத் தலைநகரான ஷேபர்கான் நகரைத் தாலிபன் கைப்பற்றியதாக அதன் துணைநிலை ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, நாட்டின் அதிகமக்கள் தொகை கொண்ட, கனிம வளங்கள் நிறைந்த குண்டூஸ் நகரத்தையும் தலிபான் படைகள் கைப்பற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும், நாட்டின் மற்றொரு வடக்கு நகரமான சர்-இ-புல் (Sar-e-Pul) ஆக்கிரமித்து வருகின்றனர். ஆக்கிரமிப்பு செய்த இடங்களில் அரசு பாதுக்காப்பு படைகள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவதக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் மேற்கு நகரமான ஹெராத் நகரிலும், தெற்கில் முக்கிய நகரங்களாக கருதப்படும் கந்தஹார், லஷ்கர் கா பகுதிகளிலும் சண்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஷேபர்கான்:
ஷேபர்கான் நகரின் துணைநிலை ஆளுநர் காதர் மாலியா AFP செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "இது மிகவும் துரதிருஷ்டவசமான சம்பவம். அரசுப் பாதுகாப்பு படைகளும், அதிகாரிகளும் புறநகர் பகுதியில் அமைந்துள்ளா விமான நிலையத்திற்கு பின்வாங்கியுள்ளனர். நகரின் மையப்பகுதிகள் தாலிபான் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது” என்று தெரிவித்தார்.
ஷேபர்கான் நகரைக் கைப்பற்றியதன் மூலம் ஜவாஸ்ஜன் மாகாணத்தை முற்றிலும் கைப்பற்றிவிட்டதாக தாலிபான் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தது.
ஆளுநர் மாளிகை, காவல்துறை தலைமையகம், மத்திய சிறை போன்ற நகரின் முக்கிய கட்டிடங்களை கட்டிடங்களை தலிபான் படைகள் கைப்பற்றியதாக ஜவாஸ்ஜன் மாகாண சபை உறுப்பினர் பிஸ்மில்லா சாஹில் கூறினார். இருப்பினும், விமான நிலையம் மற்றும் இராணுவப் படை வளாகங்கள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், தாலிபன் வாதத்தை ஆப்கான் அரசு மருத்துதுள்ளது. "நகரத்தை ஆக்கிரமிக்க நடக்கும் எந்த முயற்சிகளையும் ஆப்கானிஸ்தான் உறுதியாக எதிர்க்கும். ராணுவத்தினர் இப்போது உறுதியாக பதிலடி கொடுக்கத் தொடங்கவுள்ளனர். அத்துமீறல் முயற்சியும் முறியடிக்க சிறப்பு ஆயுதப் படைகள் தயார் நிலையில் உள்ளனர். விமானத் தாக்குதல்கள் தொடரும்” என ஆப்கானிஸ்தான் நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
ஜவாஸ்ஜன் மாகாணத் தலைநகர் ஷேபர்கான், பிரபல ஆயுதக்குழுத் தலைவர் அப்துல் ரஷீத் தோஸ்துமின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். துருக்கி நாட்டில் மருத்துவ சிகிச்சைப் பெற்று வந்த இவர், கடந்த வாரம் தான் ஆப்கானிஸ்தான் நாடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 90-களில் தலிபான்களுக்கு எதிரான போராட்டத்தில் மிகப்பெரிய பதிலடி கொடுத்து தாலிபன் படையினரின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .