மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவில் மிகவும் கொடிய 'மார்பர்க் வைரஸ்' (Marburg) வைரஸ் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது எபோலாவைப் போன்றதொரு கொடிய வைரஸ் நோய். கோவிட் 19 போல் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக் கூடியது.
குறிப்பாக வவ்வால்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவுவதாகக் கூறப்படுகிறது. இந்நோய் தாக்கினால் மரண வாய்ப்பு 88% என்று உலக சுகாதார மையத்தால் கணக்கிடப்பட்டுள்ளது. ஆப்ரிக்காவின் கினியா நாட்டில் தற்கு குக்கெடோ பகுதியில் ஆகஸ்ட் 2 ஆம் தேதியன்று மார்பர்க் வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கினியா நாட்டு அரசும் இதனை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
மார்பர்க் வைரஸ் வேகமாகப் பரவக் கூடியது என்பதால் அதன் தாக்கத்தைக் கண்டறிந்து தடுப்பது உடனடித் தேவை என உலக சுகாதார மையத்தின் பிராந்திய இயக்குநர் டாக்டர் மட்ஷிடிசோ மோட்டி கூறியிருக்கிறார். மேலும், சுகாதார அதிகாரிகளுடன் இது தொடர்பாக ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளதாகவும். ஏற்கெனவே, எபோலா கட்டுப்பாட்டில் பெற்றுள்ள அனுபவத்தைப் பயன்படுத்தி மார்பர்க் வைரஸை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மார்பர்க் வைரஸ் எப்படிப் பரவுகிறது?
குகைகள், சுரங்கங்களில் வாழும் வவ்வால்கள் தான் இந்த வகை வைரஸின் கேரியர் எனக் குறிப்பிடப்படுகிறது. அத்தகைய குகை வாழ், சுரங்கங்கள் வாழ் வவ்வால்களுடன் மனிதன் நேரடித் தொடர்பில் வரும்போது மனிதனுக்கு வைரஸ் தொற்று உண்டாக வாய்ப்புள்ளது. ரோஸெட்டஸ் வவ்வால்கள் (Rousettus bats) இந்த பாதிப்பை உருவாக்குகின்றன என்று உலக சுகாதார மையம் கணித்துள்ளது. மார்பர்க் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் உமிழ் நீர், வியர்வை, சிறுநீர் மூலம் மற்ற மனிதருக்கு இந்த வைரஸ் பரவுகிறது. அதேபோல் பாதிக்கப்பட்ட நபர் பயன்படுத்திய இடத்தையும், பொருளையும் மற்ற நபர் பயன்படுத்தினாலும் தொற்று ஏற்படுவது உறுதி.
அறிகுறியும் சிகிச்சையும்:
இந்த நோயால் பாதிக்கப்படும் நபருக்கு திடீரென அதிகமான காய்ச்சல் ஏற்படுகிறது. கூடவே தலைவலியும் உண்டாகுகிறது. உடல் அசதி அசவுகரியம் ஏற்படுகிறது. இந்த நோய் தாக்கத்தால் 84% உயிரிழப்புக்கு வாய்ப்பு இருப்பதாக முந்தைய தரவுகள் கூறுகின்றன. இந்த நோய்க்கு இதுவரை தனியாக தடுப்பூசியோ அல்லது ஆன்ட்டிவைரல் சிகிச்சையோ இல்லை. ஆனால், உடலில் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஏற்ப ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை கொடுத்தால் உயிரிழப்புகளைத் தடுக்கலாம் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
கினியாவுக்கு சபாஷ் சொன்ன 'WHO'
கினியா சுகாதாரத் துறை ஊழியர்களை உலக சுகாதார அமைப்பு (WHO) வெகுவாகப் பாராட்டியுள்ளது. காரணம் மார்பர்க் வைரஸ் தாக்கத்தை வெகு விரைவில் கண்டறிந்து அதனை உலக சுகாதார அமைப்பிடம் அந்நாடு தெரிவித்துள்ளது. சியாராலியோன், லைபீரியா நாடுகளுக்கு இடையேயான எல்லையை ஒட்டிய கிராமத்தில் தான் முதன் முதலில் மார்பர்க் வைரஸ் தொற்றாளர் கண்டறியப்பட்டுள்ளார். ஜூலை 25 ஆம் தேதி ஒரு நபர் உடல் நலக்குறைவால் இறந்தார். அவருக்கு ஆரம்பத்தில் மலேரியா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர் சிகிச்சை பலனின்றி இறக்கவே, அவருக்கு எபோலா, மார்பர்க் பரிசோதனைகள் செய்யப்பட்டன. எபோலா நெகடிவ், மார்பர்க் பாசிடிவ் என ஆய்வு முடிவு வந்தது. அது தெரிந்தவுடனேயே அதிகாரிகள் உலக சுகாதார மையத்துக்கு முடிவு அறிக்கைகளை அனுப்பியுள்ளனர். இதனால், உலக சுகாதார மையம் கினியாவுக்கு தொற்றுநோய் தடுப்பு நிபுணர்களையும், சமூக மானுடவியலாளர்களையும் ஆய்வுகள் மேற்கொள்ள அனுப்பியுள்ளது.
இந்தக் குழு, கினியா சுகாதாரக் குழுவினருடன் இணைந்து, ஆபத்தை அறிதல், தொற்றைக் கண்காணித்தல், சமூகப் பரவலை உறுதி செய்தல், சோதனைகள் மேற்கொள்ளுதல், மருத்துவ உதவி வழங்குதல், தொற்றுத் தடுப்பு, மருந்துகளைக் கொண்டு சேர்த்தல் போன்றவற்றை மேற்கொள்ளும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கினியா எல்லையை ஒட்டிய நாடுகளிலும் கண்காணிப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்துதல்..
மார்பர்க் வைரஸால் உயிரிழந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்போது தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஹை ரிஸ்க் பட்டியலில் உள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதோடு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். வேறு யாருக்கும் தொற்று பரவியுள்ளதா என்ற கண்காணிப்பும் தொடங்கியுள்ளது. கடந்த காலங்களில் தெற்கு ஆப்ரிக்காவின் அங்கோலா, கென்யா, உகாண்டா, காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளில் மார்பர்க் வைரஸ் பரவியுள்ளது. ஆனால், மேற்கு ஆப்ரிக்க நாட்டில் மார்பர்க் வைரஸ் தாக்கம் கண்டறியப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.