Watch Video: ஜப்பானின் ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஸ்பேஸ்-ஒன் தயாரித்த ராக்கெட் சில நொடிகளில் வெடித்து சிதறியுள்ளது.


வெடித்து சிதறிய ராக்கெட்:


ஜப்பானிய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ராக்கெட் புதன்கிழமை வானை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது. இந்த காட்சிகள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால், புறப்பட்ட சில நொடிகளிலேயே அந்த ராக்கெட் பல துண்டுகளாக வெடித்து சிதறியது. டோக்கியோவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப்  நிறுவனமான ஸ்பேஸ் ஒன்,  செயற்கைக்கோளை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய முதல் ஜப்பானிய தனியார் நிறுவனம் என்ற பெருமையை பெறுவதை இலக்காக கொண்டிருந்தது.  18-மீட்டர் (60-அடி) உயரம் கொண்ட அந்த  திட-எரிபொருள் கைரோஸ் ராக்கெட், மேற்கு ஜப்பானில் உள்ள வகயாமா மாகாணத்தில் உள்ள, ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் சொந்த ஏவுதளத்தில் இருந்து,  அரசாங்கத்தின் ஒரு சிறிய சோதனை செயற்கைக்கோளை சுமந்து கொண்டு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 






ராக்கெட் வெடிக்கும் காட்சிகள்:


திட்டமிட்டபடி ராக்கெட் புறப்பட்டு வான் நோக்கி பயணித்ததை, வானில் பறந்த ஹெலிகாப்டரில் இருந்தபடி சிலர் படம் பிடித்தனர். சரியாக அந்த ஹெலிகாப்டரை கடந்து சில மீட்டர்கள் மேலே சென்றதும் ராக்கெட்டானது பலத்த சத்தத்துடன் சுக்கு நூறாக வெடித்து சிதறியது. இதனால் அங்கு கரும்புகை மூட்டமும் ஏற்பட்டது. ராக்கெட்டின் பாகங்கள் அருகிலிருந்த மலையின் மீது விழுந்தன. அதிர்ஷ்டவசமாக பாதுகாப்பான தூரத்தில் பறந்து கொண்டிருந்ததால், ஹெலிகாப்டருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.  இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.


ராக்கெட் வெடிக்க காரணம் என்ன?


கைரோஸ் ஏவப்பட்ட 51 நிமிடங்களுக்குப் பிறகு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் என நம்பப்பட்டது. கேனான் எலக்ட்ரானிக்ஸ், ஐஎச்ஐ ஏரோஸ்பேஸ், கட்டுமான நிறுவனமான ஷிமிசு மற்றும் ஜப்பானின் அரசாங்கத்திற்குச் சொந்தமான டெவலப்மென்ட் வங்கி உள்ளிட்ட ஜப்பானிய தொழில்நுட்ப வணிகங்களின் குழுவால் ஸ்பேஸ் ஒன் 2018 இல் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது. விபத்து தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திட்டமிட்டபடி ராக்கெட் ஏவப்பட்டாலும், எதிர்பாராத விதமாக விபத்து நிகழ்ந்துள்ளது. இதற்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜப்பானுக்கு பின்னடைவு:


தற்போதுள்ள உளவு செயற்கைக்கோள்கள் செயலிழந்தால், தற்காலிக, சிறிய செயற்கைக்கோள்களை விரைவாக செலுத்த முடியுமா என்பதை அரசாங்கம் மதிப்பிட விரும்புகிறது. அதேநேரம், லாபகரமான செயற்கைக்கோள் ஏவுதள சந்தையில் நுழைவதையும் ஜப்பான் பரிசீலித்து வருகிறது. இந்த சூழலில் கைரோஸ் ராக்கெட்டின் தோல்வி, ஜப்பானின் முயற்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் மற்றொரு ஜப்பானிய ராக்கெட்டும் சோதனையின் போது வெடித்து சிதறியது குறிப்பிடத்தக்கது.