உலக அளவில் சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக மக்கள் தொகையில் சீனா முதலிடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளது. ஆனால், இந்தாண்டில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும என ஐக்கிய நாடுகள் சபை தகவல் வெளியிட்டுள்ளது.


ஜப்பான் மக்கள் தொகை:


நிலைமை இப்படியிருக்க, ஜப்பானின் நிலை தலைகீழாக உள்ளது. பிப்ரவரி 28ஆம் தேதி அந்நாடு வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஆண்டு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. கடந்தாண்டு, ஜப்பானில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை விட இறப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.


அதாவது, 8 லட்சத்திற்கும் குறைவான குழந்தைகளே பிறந்துள்ளனர். ஆனால், இறப்பை பொறுத்தவரையில், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த 2008ஆம் ஆண்டு, ஜப்பான் மக்கள் தொகை 12 கோடியே 80 லட்சத்திற்கும் அதிகமாக பதிவானது. இது, ஜப்பான் பதிவு செய்த அதிக பட்ச மக்கள் தொகையாகும்.


தொடர் சரிவு:


ஆனால், ஜப்பான் மக்கள் தொகை தற்போது 12 கோடியே 40 லட்சமாக சரிந்துள்ளது. மேலும், மக்கள் தொகை மிக வேகமாக சரிந்து வருகிறது. இதற்கிடையில், 65 அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் மக்கள் தொகை விகிதம் கடந்த ஆண்டு 29% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 


தென் கொரியா குறைவான கருவுறுதல் விகிதத்தைக் கொண்டிருந்தாலும், ஜப்பானின் மக்கள் தொகை வேகமாகக் குறைந்து வருவது பெரும் கவலை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இதனிடையே, கணித்ததை விட வேகமாக குறைந்து வரும் மக்கள் தொகை பிரச்னையை சரி செய்ய குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் மீது இரண்டு மடங்கு அதிகமான தொகை செலவிடப்படும் என ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உறுதி அளித்திருந்தார்.


ஜப்பான் பிரதமரின் ஆலோசகர் அதிர்ச்சி தகவல்:


இந்நிலையில், பிரதமர் புமியோ கிஷிடாவின் உதவியாளர் அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். ஜப்பான் அதன் பிறப்பு விகிதத்தின் வீழ்ச்சியைக் குறைக்க முடியாவிட்டால், ஜப்பான் இல்லாமல் போய்விடும் என ஜப்பான் பிரதமரின் ஆலோசகரும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான மசாகோ மோரி தெரிவித்துள்ளார்.


செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேர்காணல் அளித்த அவர், "அழியப் போகும் சூழலை மக்கள்தான் எதிர்கொள்ள வேண்டும். அவர்கள்தான், அதிக அளவில் தீங்கை எதிர்கொள்ள வேண்டும். மக்கள் தொகை வீழ்ச்சி குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கும். அது படிப்படியாக வீழ்ச்சியடையவில்லை. அது நேராக கீழே செல்கிறது.


இந்த திடீர் வீழ்ச்சியால், இப்போது பிறக்கும் குழந்தைகள் சிதைந்து, சுருங்கி, செயல்படும் திறனை இழக்க போகும் சமூகத்தில் தள்ளப்படுவார்கள். எதுவும் செய்யாவிட்டால், சமூக பாதுகாப்பு அமைப்பு வீழ்ச்சியடையும். தொழில்துறை மற்றும் பொருளாதார வலிமை குறையும். நாட்டைப் பாதுகாக்க பாதுகாப்பு படைகளுக்கு போதுமான ஆட்கள் இல்லை.


குழந்தை பிறக்கும் வயதுடைய பெண்களின் எண்ணிக்கை குறைவதால் இப்போது சரிவை மாற்றுவது மிகவும் கடினம் என்றாலும், வீழ்ச்சியை மெதுவாக்குவதற்கும் சேதத்தைத் தணிக்க உதவுவதற்கும் அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.