உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவிவரும் நிலையில் ஜப்பான் செல்லும் இந்தியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அந்நாடு விதித்துள்ளது.
ஒமிக்ரான் திரிபு முதல் முதலாக தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை உலக சுகாதார நிறுவனத்துக்கு நவம்பர் 24ம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவியது.
இது மிகவும் வீரியமிக்கது என்றும் அதிவிரைவில் பரவக்கூடியது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். உலகம் முழுவதும் மொத்தம் 29 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவி 373 பேருக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அந்த அளவுக்கு இதன் வேகம் அதிகரித்துள்ளதாக கணக்கிடப்படுகிறது. தென் ஆப்பிரிக்காக, நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஒமிக்ரான் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கர்நாடகாவில் 2 பேருக்கும், குஜராத் மற்றும் மும்பையில் தலா ஒருவருக்கும் ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. ஆனால் பயப்பட வேண்டாம் எனவும் இருவருக்கும் லேசான அறிகுறி மட்டுமே காணப்படுவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்தவர் நேற்று கர்நாடகாவில் இருந்து மும்பை தப்பிச்சென்றார். மேலும் 10 பயணிகள் கொடுக்கப்பட்ட முகவரியிலும் இல்லாமல் தொலைபேசியையும் அணைத்து வைத்துவிட்டு மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் கர்நாடக போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜப்பான் செல்லும் இந்தியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அந்நாடு விதித்துள்ளது. ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா, கிரீஸ், ருமேனியா மற்றும் நான்கு அமெரிக்க மாநிலங்களில் இருந்து ஜப்பானுக்கு பயணம் செய்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் கடுமையான தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கொலராடோ, ஹவாய், மினசோட்டா மற்றும் நியூயார்க்கிலிருந்து ஜப்பானுக்குச் செல்லும் ஜப்பானியர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் அரசால் நியமிக்கப்பட்ட இடங்களில் மூன்று நாட்கள் கட்டாயமாக தங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் வளர்ந்து வரும் ஒமிக்ரான் வழக்குகள் மேலும் பரவுவதைத் தடுக்க, ஜப்பான் அரசு கடுமையான நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளது என்று தலைமை அமைச்சரவை செயலாளர் ஹிரோகாசு மாட்சுனோ ஏற்கெனவே தெரிவித்திருந்தார். ஜப்பான் அரசால் நியமிக்கப்பட்ட இடங்களில் மூன்று நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கான பட்டியலில் ஏற்கனவே ஆஸ்திரியா, ஈக்வடார் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் உள்ளன. பலர் 10 நாட்களுக்கும் மேலாக கடுமையான தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்