இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள எரிமலை வெடிப்பு காரணமாக ஜாவா தீவுகளில் வானில் சுமார் 40 ஆயிரம் அடிகள் உயரத்திற்குப் புகையும், சாம்பலும் பரவியிருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர். அப்பகுதி மக்களால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோக்களில் வானில் இருந்து பெரிய குவியல்களாக சாம்பல் விழுவது பதிவிடப்பட்டுள்ளது. 


இந்தோனேசியாவின் லுமாஜங் நகரத்தில் உள்ள செமெரு எரிமலை நேற்று மதியம் சுமார் 2.50 மணிக்கு வெடித்துள்ளது. இதுவரை யாரும் மரணமடையவில்லை என்ற போதும், மீட்புப் பணியினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 


எரிமலை வெடித்ததால் வானில் கருமேகங்கள் கடுமையாக சூழ்ந்து, சூரிய வெளிச்சம் முழுமையாக மறைந்துள்ளது. லுமாஜங் நகரத் தலைவர் தொரிகுல் ஹக் அப்பகுதி ஊடகங்களிடையே பேசிய போது, `கடுமையான சாம்பல் வெளியேற்றம் அருகில் உள்ள பல கிராமங்களை இருளில் மூழ்கச் செய்துள்ளது. எரிமலை வெடித்ததால் லுமாஜங் நகரத்தை அருகில் உள்ள மலாங் நகரத்துடன் இணைக்கும் பாலம் முழுவதுமாகத் தகர்ந்துள்ளது. ஒரே நேரத்தில் எரிமலை வெடிப்பு, கன மழை ஆகியவை ஏற்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.



எரிமலை சாம்பல் அறிவுரைக் குழு சுமார் 40 ஆயிரம் அடிகளுக்கு வானில் சாம்பல் எழுந்துள்ளதாகவும், அதன்பிறகு மழையாக மாறி மக்கள் மீது பொழிந்துள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேக்மா இந்தோனேசியா என்ற அமைப்பு எரிமலைகள், நில அதிர்வு, சுனாமி முதலானவற்றைக் கண்காணித்து வருகிறது. அந்த அமைப்பு இந்த எரிமலை வெடிப்பு சுமார் 5160 நொடிகள் நிகழ்ந்திருப்பதாகக் கணித்துள்ளது. எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் தடுப்பு நிறுவனம் சார்பில் கண்காணிக்கப்பட்டதில், எரிமலையில் இருந்து சுமார் 500 முதல் 800 மீட்டர்கள் வரை எரிமலைக் குழம்பு பரவியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 


பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் புடி சாண்டோசா இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், `செமேரு எரிமலை வெடிப்பால் சூடான சாம்பல் மேகங்களில் இருந்து விழும் நிகழ்வுகள் தென்பட்டுள்ளன’ என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர் லுமாஜங், சும்பெர்வுலு கிராமம், கண்டிபுரோ மாவட்டம், சுபிடுராங், ப்ரோனோஜிவோ முதலான பகுதிகளில் சூடான சாம்பல் விழும் நிகழ்வுகள் தென்பட்டிருப்பதாகவும், அதனால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். 



மேலும் அவர் இதுவரை இறப்புகள் எதுவும் நிகழவில்லை என்றும், தொடர்ந்து தகவல் திரட்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். கிழக்கு ஜாவா, லுமாஜங் பகுதிகளைச் சேர்ந்த பேரிடர் மேலாண்மை நிறுவனங்கள் இந்தப் பகுதிகள் விரைந்து பாதிப்புகளைக் கணக்கெடுப்பது, மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பது முதலானவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். 


ஜாவா தீவுகளில் உள்ள செமேரு எரிமலை அப்பகுதியின் மிக உயர்ந்த மலையாகும். இது இந்தோனேசியாவில் உள்ள 130 எரிமலைகளுள் ஒன்று. கடந்த 1818ஆம் ஆண்டு முதல் இந்த எரிமலை சுமார் 55 முறை வெடித்துள்ளது. அவற்றுள் 10 முறை மக்கள் உயிரிழந்துள்ளனர்.