நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பிராந்தியமாக (seismically active region) உள்ள நாடுகளில் முக்கியமானது ஜப்பான். ஒப்பீட்டளவில், இங்கு அதிக அளவில் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகின்றன.


என்ன காரணம்?


ஜப்பான் நாடு பசிபிக் நெருப்பு வளையத்தில் (pacific ring of fire) அமைந்துள்ளது, டெக்டோனிக் பிளேட்டுகள் ஜப்பானிய தீவுக் கூட்டமான யூரேசியன், பிலிப்பைன், பசிபிக் மற்றும் வட அமெரிக்க பகுதிகளைச் சந்திக்கின்றன. இதனால், ஜப்பான் நாடு இயற்கை பேரழிவுகள் அதிகம் ஏற்படும் அபாயகரமான மண்டலமாக அறியப்படுகிறது.


ஒவ்வொரு டெக்டோனிக் பிளேட்டும் மாறி, மோதும்போது, அதிகப்படியான அழுத்தம் ஏற்பட்டு, அதிர்ச்சி அலைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக கடலோரப் பகுதிகளில்  நில நடுக்கங்கள் ஏற்படுவதால், சுனாமிகள் அடிக்கடி தூண்டப்படுகின்றன. இது கடலோரப் பகுதிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.


இங்கு எரிமலை, சூறாவளி உள்ளிட்ட பேரிடர்களும் தொடர்ந்து ஏற்படுகின்றன. உலகத்தில் ஏற்படுவதில் 10-ல் ஒரு நிலநடுக்கம் ஜப்பானில் ஏற்படுகிறது. சராசரியாக ஆண்டுக்கு ரிக்டர் அளவுகோலில் 7 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகிறது.




ஆண்டுதோறும் 5 ஆயிரம் நில நடுக்கங்கள்


ஜப்பானில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 5,000 சிறிய நில நடுக்கங்கள் ஏற்படுகின்றன. இதில் பாதி நில நடுக்கங்கள் 3.0 – 3.9 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவாகின்றன. சுமார் 160 நில நடுக்கங்கள் 5 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவாகி, ஜப்பானையே ஆட்டிப் பார்க்கின்றன.


கி.மு. 416 முதல் கி.மு. 887 வரை ஜப்பானில், 623 நிலநடுக்கங்கள் பதிவாகின. இதில் 23 நிலநடுக்கங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை ஆக இருந்து, பேரழிவை ஏற்படுத்தின.


தற்போது இயற்கைப் பேரிடர்களில் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ளும் வகையில், ஜப்பான் கட்டுமானங்களை மேம்படுத்தி உள்ளது. எனினும் எதிர்பாராத நிலநடுக்கங்களால், அங்குள்ள நினைவுச் சின்னங்கள் சேதம் அடைவதோடு சொத்துகள் பாதிக்கப்படுகின்றன.


புத்தாண்டில் பயங்கர நிலநடுக்கம்


இந்த நிலையில் புத்தாண்டு தினமான இன்று (ஜன.1) ஜப்பான் மத்திய பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.  7.2 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இஷிகாவாவில் உள்ள வாஜிமா நகரத்தில் 1.2 மீட்டர் உயரத்தில் சுனாமி அலை வந்துள்ளது. 5 மீட்டர் வரை அலை ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




1923 கன்டோ நிலநடுக்கம் (The Great Kanto Earthquake of 1923)


முன்னதாக 1923-ல் ஜப்பானின் கன்டோ பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆகப் பதிவானது. டோக்கியோ, யோகோஹமா பகுதிகளில் கடும் பேரழிவு ஏற்பட்டது. இதில், 1.4 லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர்.


செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்களில் பாதி அளவுக்கும் கான்க்ரீட் கட்டிடங்களில் 10-ல் ஒரு கட்டிடங்களும் மோசமாக உருக்குலைந்தன. அட்டாமி பகுதியில் 39.5 அடி உயரத்துக்கு அலை உருவாகி, சுனாமி ஏற்பட்டது. அந்த நேரத்தில் ஜப்பானைத் தாக்கிய மோசமான இயற்கைப் பேரிடர் அதுதான்.


1995 ஹன்ஷின் நிலநடுக்கம் (The Great Hanshin Earthquake 1995)


தொடர்ந்து ஹன்ஷின் பகுதியில் 1995ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் ஆண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கோப் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 7.2 அளவு ரிக்டர் அளவுகோலில் பதிவானது. 17ஆம் தேதிக்கு முன்னதாக ஒருமுறை லேசாக நிலநடுக்கம் வந்த நிலையில், தொடர்ந்து அடுத்த நாள் 7.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.


ஹோன்ஷு, அவாஜி தீவுக்கிடையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் தரமட்டம் ஆகின. பாலங்கள் சரிந்தன. ரயில் பாதைகள் அழிந்தன. சுமார் 6 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 30 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர். 3 லட்சம் மக்கள் வீடுகளை இழந்தனர்.




2011 கிழக்கு ஜப்பான் நிலநடுக்கம் (The Great East Japan Earthquake)


2011ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி ஜப்பானில் பேரழிவை ஏற்படுத்திய நாளாகக் கருதப்படுகிறது. இங்கு ரிக்டர் அளவுகோலில் 9 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது. இதுதான் இதுவரை பதிவானதிலேயே அதிகபட்ச, சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஆகும். இந்த நிலநடுக்கத்தால் 15,894 பேர் மடிந்தனர்.


இது டோஹோக்கு பகுதியின் வட கிழக்கு கடற்கரை பகுதியில், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 38 மீட்டர் உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பின. 200 சதுர மைல் தூரத்துக்கு அலைகள் ஏற்பட்டன. இதனால் 5 லட்சம் மக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. 20 ஆயிரம் மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்தனர்.




சுனாமி காரணமாக, ஃபுக்குஷிமா அணு உலையில் அணு உருகியது. ஆலையின் குளிர்விப்பான் அழிந்ததை அடுத்து அணு உருகி, கதிரியக்க பொருள் ஏற்பட்டது. எனினும் இதனால் எந்த இறப்பும் ஏற்படவில்லை. ஆனாலும் 1 லட்சம் மக்கள் அங்கிருந்த வீடுகளைக் காலி செய்து, இடம்பெயந்தனர். இந்த நிலநடுக்கத்தால், 360 பில்லியன் டாலர் அதாவது, 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டது.


எது எப்படியோ, மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரியதாக, சிறிய நாடாக இருந்தாலும் ஜப்பான் எல்லாவற்றில் இருந்தும் மீண்டெழும் நகரமாக, எதையும் எதிர்கொண்டு வருகிறது.