கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் இயற்கை பேரிடருடன் தொடங்கியுள்ளது. கடந்தாண்டு முழுவதும் உலகின் பல்வேறு பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால், சில உலக நாடுகள் நிலைகுலைந்துள்ளதுடன், மற்ற நாடுகளும் பீதியடைந்தன. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் மறக்க முடியாத நினைவுகளை விட்டுச்சென்றது. பலரின் உயிரை பறித்து, பலருக்கு குடும்பம் இல்லாமல் ஆக்கியது.


ஆண்டின் முதல் நாளே நிலநடுக்கம்:


இந்த நிலையில், இந்தாண்டின் முதல் தேதியிலேயே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் மத்திய பகுதியில் 7.2 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஹோன்ஷூ அருகே அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்துடன் வெளியேறி வருகின்றனர்.


ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும், கான்டோ பகுதியிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதம் அல்லது உயிரிழப்பு குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து, இஷிகாவாவில் உள்ள வாஜிமா நகரத்தில் 1.2 மீட்டர் உயரத்தில் சுனாமி அலை வந்துள்ளது.


ஆனால், அதே பகுதியில் உள்ள நோட்டோ நகரில் ஐந்து மீட்டருக்கும் உயரமான சுனாமி வரும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடுமையான் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு ஜப்பான் பகுதிகளில் இருக்கும் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. 


களத்தில் இறங்கிய இந்திய தூதரகம்:


ஜப்பான் நிலநடுக்கத்தில் இந்தியர்கள் யாரேனும் சிக்கி உள்ளார்களா என கேள்வி எழுந்துள்ள நிலையில், நிலநடுக்கம் மற்றும் சுனாமி தொடர்பாக தொடர்பு கொள்ள இந்திய தூதரகம் அவசர கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. அவசர உதவிக்காக அவசர உதவி எண்களையும் இமெயில் ஐடி-யையும் தூதரகம் வெளியிட்டுள்ளது.


 






ஜப்பானை தொடர்ந்து தென் கொரியாவின் கேங்வான் மாகாணத்தில் குடியிருப்பாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உயரமான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரையில் உள்ள கேங்வான் மாகாணத்தின் சில பகுதிகளில் கடல் மட்டம் உயரக்கூடும் என்று தென் கொரியாவின் வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.