நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் லைவ்வில் பேசிக்கொண்டிருக்கும்போது படுக்கையிலிருந்து வந்த மகளை மீண்டும் படுக்கைக்கு அனுப்பிய வீடியோ வைரலாகியுள்ளது.
உலகின் அழகான நாடுகளில் ஒன்று நியூசிலாந்து. ரம்யமான சீதோஷ்ண நிலையை கொண்டிருக்கும் அந்நாட்டின் பிரதமராக இருப்பவர் ஜெசிந்தா ஆர்டெர்ன்.
சிறு வயதில் தான் கண்ட வறுமையை கொண்டு தனது அரசியல் சித்தாந்தத்தை வடிவமைத்தவர் ஜெசிந்தா. அதன் காரணமாக தன்னுடைய 17ஆவது வயதில் தொழிலாளர் கட்சியின் ஆதரவாளரானார்.
2008ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் வறுமை ஒழிப்பு, தன் பாலின ஈர்ப்பாளர்களின் உரிமைகள் தொடர்பான சட்ட மசோதாக்களை ஆதரித்தார்.
அதனையடுத்து அவர் 2017ஆம் ஆண்டு தொழிலாளர் கட்சியின் தலைவரானார். அந்த ஆண்டு நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்று தேசியவாத கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தார்.
பிரதமராக இருந்தபோது அவர் குழந்தை பெற்றுக்கொண்டதை அடுத்து உங்களால் தாயாக இருந்துகொண்டு, பொது வாழ்விலும் வென்று காட்ட முடியுமா என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர், ”நான் ஒன்றும் 'சூப்பர் உமன்' அல்ல, என் கணவர் வீட்டில் இருந்து குழந்தையை பார்த்துக் கொள்வதால் மட்டுமே என்னால் பணியை பார்க்க முடிகிறது. நானும் சாதாரண பெண்தான். எனக்கு சூப்பர் உமன் போன்ற தோற்றம் தேவையில்லை. பெண்கள் எல்லாம் அப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கக்கூடாது” என்று அசத்தலான பதிலளித்தார்.
2019ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடந்த தீவிரவாத தாக்குதலை அவர் அணுகிய விதம் அவர் பக்கம் உலகத்தின் பார்வையை திருப்பியது. சமீபத்தில் நடந்த நியூசிலாந்து நாடாளுமன்ற தேர்தலிலும் வென்று ஜெசிந்தாவே பிரதமராக பதவியேற்றார்.
செய்தியாளர் சந்திப்பு என்றாலே மன நடுக்கம் கொள்ளும் பிரதமர்கள் மத்தியில் ஜெசிந்தா சற்றே வித்தியாசமானவர். ஆம், கடந்த மாதம் அவர் கொரோனா தடுப்பூசி செலுத்தும் அரசின் இலக்கு குறித்தும், கொரோனா பாதிப்பு குறித்தும் செய்தியாளர்களிடம் விளக்கமளித்துக்கொண்டிருந்தபோது நில நடுக்கம் ஏற்பட்டது.
அந்த சமயம் சிறிது தடுமாறிய ஜெசிந்தா நிலைமையை சமாளித்து, “மன்னிக்கவும் சிறிய கவன சிதறல் உங்கள் கேள்வியை மீண்டும் கேட்கிறீர்களா” என்ற கூறினார்.
இந்நிலையில், லைவ்வில் ஜெசிந்தா நேற்று உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவரது மகள் படுக்கையறையிலிருந்து வந்ததும், “நீங்கள் படுக்கையில் இருக்க வேண்டும், அன்பே. இது தூங்கும் நேரம். மீண்டும் படுக்கைக்குச் செல்லுங்கள், நான் ஒரு நொடியில் வந்து உங்களைப் பார்க்கிறேன். பாட்டி உங்களை படுக்கைக்கு அழைத்துச் செல்வார்” என்று ஜெசிந்தா கூறி குழந்தையை படுக்கைக்கு அனுப்பிவைத்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்