இத்தாலியில் ஒரே நபருக்கு குரங்கு அம்மை , கொரோனா தொற்று ,மற்றும் எச்.ஐ.வி ஆகிய மூன்று வியாதிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


கொரோனா தொற்று உறுதி :


இத்தாலியை சேர்ந்த 36 வயது நபர் 9 நாட்கள் சுற்றுப்பயணமாக ஸ்பெயின் சென்று திரும்பியுள்ளார். சொந்த நாட்டிற்கு திரும்பிய நாள் முதலே அவருக்கு தீவிர காய்ச்சல், சோர்வு மற்றும் தொண்டை புண் உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது.  இதனால் அவர் அங்குள்ள மருத்துவமனையில் பரிசோதனைக்காக சேர்ந்தார். முதற்கட்டமாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜூலை 2 ஆம் தேதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.





குரங்கு அம்மை நோய் உறுதி :


அதே நாளில் பிற்பகலில் அவரது இடது கையில் ஒரு ரேஷஸ் ஏற்பட துவங்கியிருக்கிறது.. அடுத்த நாள், அவரது உடல், கீழ் மூட்டுகள், முகம் உள்ளிட்ட பல பகுதிகளில் ரேஷஸுடன் , சில வலி மிகுந்த கொப்புளங்களும் ஏற்பட துவங்கியிருக்கின்றன. சில சிகிச்சைகள் அளிக்கப்பட்டது . ஆனாலும் எவ்வித பலனும் இல்லை. ஜூலை  5 ஆம் தேதி கொப்புளங்கள் உடல் முழுவதும் பரவி, ஒரு படை போல மாற துவங்கியது. இதனால் உடனடியாக அந்த நபர் இத்தாலியின் கேடானியாவில் உள்ள சான் மார்கோ பல்கலைக்கழக மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு குரங்கு அம்மை நோய் இருக்கிறதா என பரிசோதனை செய்யப்பட்டது . சோதனை முடிவில் அவருக்கு குரங்கு அம்மை இருப்பதும் உறுதியானது.




எச்.ஐ.வி உறுதி :


மேலும் அந்த நபருக்கு பலக்கட்ட STI சோதனைகளும் செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அந்த நபருக்கு HIV-1 இருப்பதும் கண்டறியப்பட்டது.  அவர் தான் ஜூன் 16 முதல் 20 வரை ஸ்பெயினுக்கு சென்றதாகவும் , அங்கு சில ஆண்களுடன் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டதாகவும் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.  அந்த நபரின் CD4 எண்ணிக்கையை ஆய்வு செய்ததில் மூன்று தொற்றும் அவருக்கு சமீபத்தில்தான் ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள் . பாதிக்கப்பட்ட அந்த இளைஞருக்கு கொரோனா மற்றும் குரங்கு அம்மை நோய் குணமாகிவிட்டது. அவர் மருத்துவமனையில் இருந்து கடந்த ஜூலை 11 ஆம் தேதி டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு , வீட்டில் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார். குரங்கு அம்மை காரணமாக ஏற்பட்ட உடல் புண்கள் குணமானாலும் அவரது உடலில் தீவிர தழும்பாக அது இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.