கடந்த 2013ம் ஆண்டு ஜி ஜின்பிங்  சீன அதிபராக பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற,  ஜி20 உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்காமல் இருப்பது இதுவே முதன்முறையாகும்.  டெல்லியில் நடைபெறும் மாநாட்டை அவர் புறக்கணித்தது, இந்தியா - சீனா இடையேயான உறவில் உள்ள சிக்கலை மேலும் வலுவடைய செய்துள்ளது.


அதிபர் பங்கேற்கமாட்டார் - சீனா


”டெல்லியில் 9 மற்றும் 10ம் தேதி நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் லீ கியாங் வருகை தருவார்” என சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதோடு, ஜி20 அமைப்பு சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முக்கியமான மன்றமாகும். சீனா அனைத்து காலங்களிலும் ஜி20 நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அதில் தீவிரமாக பங்கேற்றுள்ளது. இந்த ஆண்டு ஜி20 உச்சிமாநாட்டின் போது, ​​ஜி20 ஒத்துழைப்பு குறித்த சீனாவின் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் பிரதமர் Li Qiang பகிர்ந்துகொள்வார்.  மேலும் ஜி20 நாடுகளிடையே அதிக ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் உலகளாவிய பொருளாதார மற்றும் வளர்ச்சி சவால்களுக்கும்  பதிலளிப்பார். ஜி20 உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கும், உலகப் பொருளாதாரத்தின் நிலையான மீட்சிக்கும், நிலையான வளர்ச்சிக்கும் பங்களிப்பதற்கும் அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம்” என்றும் சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வரலாற்றில் முதன்முறை..


உச்சி மாநாடு நடைபெற 4 நாட்கள் மட்டுமே உள்ள சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீன நாட்டை பொறுத்தவரையில் அதிபரை காட்டிலும் பிரதமர் என்பவர் குறைந்த சக்தி வாய்ந்த நபர் ஆவார். கடந்த 2008 ஆம் ஆண்டு ஜி20 உச்சி மாநாடு என்பது அரச தலைவர்கள் அல்லது அரசாங்கத் தலைவர்கள் பங்கேற்பதாக மேம்படுத்தப்பட்டது. அப்போது தொடங்கி ஒரு சீன அதிபர் முதன்முறையாக ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்காமல் இருப்பது இதுவே முதன்முறையாகும். 


சீனா வலியுறுத்தல்


 இந்தியாவில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் இருந்து சீனாவின் எதிர்பார்ப்பு தொடர்பான கேள்விக்கு,  “உலகப் பொருளாதாரம் மிகவும் சரிவுக்கான அழுத்தத்தையும், உலகளாவிய நிலையான வளர்ச்சிக்கான சவால்களையும் சந்தித்து வருகிறது. எனவே, சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை மன்றமாக இருக்கும் ஜி20 அமைப்பு கூட்டாண்மையை வலுப்படுத்துவது முக்கியம். உலகப் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியை எதிர்கொள்ளும் பெரிய சவால்களை எதிர்கொள்ளுங்கள்.  இதனால் உலகப் பொருளாதார மீட்சி,  வளர்ச்சி மற்றும் உலகளாவிய நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும். டெல்லி உச்சி மாநாடு ஒருமித்த கருத்தை உருவாக்கும், நம்பிக்கையின் செய்தியை அனுப்பும் மற்றும் சீனாவால் பகிரப்பட்ட செழிப்பு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" ” என சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதேநேரம், உச்சி மாநாட்டில் அதிபர் கலந்துகொள்ளாததற்கான காரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டாலும், அதுதொடர்பாக பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்


ஜி20 உச்சி மாநாடு:


ஜி 20 உச்சி மாநாடு ஆண்டுதோறும் மாறும் தலைமையின் கீழ் நடத்தப்படுகிறது. உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து, உலகப் பொருளாதாரத்தின் முன்னேற்றங்களுக்கு பதிலளிக்கும் வகையில், ஜி20 நிகழ்ச்சி நிரலை ஒன்றிணைக்கும் பொறுப்பு தலைமை தாங்கும் நாட்டையே சேரும். அமைப்பின் நோக்கத்தினை உறுதி செய்வதற்கான முடிவை,  troika எனப்படும் முக்கூட்டு அமைப்பு இறுதி செய்யும். அந்த அமைப்பில்  தலைமை தாங்கும் நாடு, கடந்த ஆண்டு தலைமை தாங்கிய மற்றும் அடுத்த ஆண்டு தலைமை தாங்க உள்ள நாடு ஆகியவை இடம்பெற்றுள்ளன.  தற்போதைய சூழலில் இந்தோனேசியா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் G20 முக்கூட்டின் உறுப்பினர்களாக இருக்கின்றன. 2024 ஆம் ஆண்டு G20 உச்சி மாநாடு பிரேசிலியாவில் நடைபெறும்.


சீனாவிற்கே இழப்பு:


நடப்பாண்டிற்கான ஜி20 உச்சிமாநாட்டில் சீன அதிபர் பங்கேற்காதது, ஜி20 அமைப்புக்கு அந்த நாட்டு அரசு எவ்வளவு முக்கியத்துவத்தை  வழங்குகிறது என்பதை கேள்விக்குறியாக்கியுள்ளதாக ராஜாங்க ரீதியிலான இந்திய அதிகாரிகள் ஏபிபி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க்கில் நடைபெற்ற  பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சீன அதிபரால் கலந்து கொள்ள முடிகிறது, ஆனால் இந்தியாவிற்கு வரவில்லை என்றால் அந்த குழுவிற்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவத்தின்  உண்மையின் அறிகுறியாகும். இந்த குழுவில் சீனா "தீவிரமாக இல்லை" என்றும்  அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


மூத்த ராஜாங்க அதிகாரியும், சீனாவுக்கான இந்தியாவின் முன்னாள் தூதுவருமான அசோக் காந்தா பேசுகையில், ” சீன அதிபர் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளாதது, சீனா ஜி20க்கு குறைவான முக்கியத்துவத்தை அளிக்கிறது அல்லது குழுவிலிருந்து வெளியேற விரும்புகிறது என்று அர்த்தமல்ல. சீன அமைப்பில் ஜனாதிபதியுடன் ஒப்பிடும்போது நிலை மிகவும் குறைவாக இருந்தாலும், அவர்களின் பிரதமர் வருவதால் அவர்களின் நிலைப்பாடு தெளிவாக இல்லை. அதேநேரம்,  சீனா அதிக முக்கியப் பங்கு வகிக்கும் மன்றங்களில் தான் அதிபரே கலந்துகொள்ள விரும்புவார் என்பது தெளிவாகிறது. இது சீனாவிற்கே ஒரு இழப்பு, ஏனெனில் அவர்களால் ஜி 20 ஐ முழுமையாகப் பயன்படுத்த முடியாது மற்றும் இது இருநாட்டு உறவில் பெரும் இடைவெளியை உருவாக்கும். பிரதமரை அனுப்புவது உதவாது. சீனாவை பொறுத்தவரையில் அதிபர் தான் மிக உயர்ந்த தலைவர்” என கூறியுள்ளார்.


பைடன் வருத்தம்:


சீன அதிபர் ஜி20 உச்சிமாநாட்டில் நேரில் கலந்து கொள்ளப் போவதில்லை என்பதில் தனக்கு ஏமாற்றம் என அமெரிக்க அதிபர் பைடன் வருத்தம் தெரிவித்துள்ளார். இருப்பினும், நவம்பரில் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறவுள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பைடன்  மற்றும் ஜி ஜிங்பிங் இருவரும் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இருநாட்டு உறவில் விரிசல்:


இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெறும் G20 உச்சி மாநாட்டை சீன அதிபர் புறக்கணிப்பது டெல்லிக்கும் பீய்ஜிங்கிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் நிலையைப் பிரதிபலிக்கிறது. கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையேயான உறவு என்பது தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. 1975ம் ஆண்டுக்குப் பிறகு இருநாடுகளுக்கு இடையே ஏற்பட்ட அந்த மோசமான சம்பவத்தில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. ஜி 20 உச்சி மாநாட்டிற்கு இந்தியாவிற்கு வராததன் மூலம், எல்லைப் பகுதிகளில் உள்ள பிரச்னைகளில் தங்களது நிலைப்பாட்டை மாற்றப்போவதில்லை என்று சீனா வலுவாக காட்ட விரும்புவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக பேசியுள்ள காந்தா “ 2013 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற அனைத்து ஜி20 மாநாட்டிலும் சீன அதிபர் கலந்துகொண்டார். எனவே அவர் இந்தியாவுக்கு வராதது வழக்கமான ஒரு நிகழ்வு அல்ல. அவர் வந்திருந்தாலும்  இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் முன்னேற்றம் கண்டிருக்காது என்றாலும், இருதரப்பு உறவு சிறப்பாக இல்லை என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.


 இதற்கிடையில், இந்திய விமானப்படை (IAF) திங்களன்று சீனா மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதிகளில் பெரும்  போர் ஒத்திகையை தொடங்கியுள்ளது. இது செப்டம்பர் 14 வரை நீடிக்கும். ஆபரேஷன் திரிசூல் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஒத்திகையில், இந்திய விமானப்படையை சேர்ந்த ரஃபேல், மிராஜ் 2000 மற்றும் Su-30MKI உள்ளிட்ட முக்கிய விமானங்கள் பங்கேற்க உள்ளன. 


தமிழ் மொழிபெயர்ப்பு: குலசேகரன் முனிரத்தினம்