பிரதமர் மோடி கடந்த 28-ந் தேதி நள்ளிரவு ஜி-20 உச்சி மாநாடு, பருவநிலை மாநாடு ஆகியவற்றில் பங்கேற்பதற்காக 5 நாள் சுற்றுப்பயணமாக வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரத்தில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட பல்வேறு நாட்டு உலக தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் இஸ்ரேல் பிரதமர் நாப்தாலி பென்னட்டும் பங்கேற்றார். கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டிற்கு பின்பு பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியுடனான சந்திப்பை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அவர்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், இஸ்ரேல் பிரதமர் பென்னட் பிரதமர் மோடியிடம், “ நீங்கள் இஸ்திரேலில் மிகவும் பிரபலமான நபர்” என்று கூறுகிறார். மேலும், இஸ்ரேல் பிரதமர் பென்னட் மோடியிடம், “எனது கட்சியில் சேர்ந்து விடுங்கள்” என்று கூறுகிறார். அதற்கு மோடி சிரிக்கிறார்.”
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “ தங்களை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி. ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் இந்தியா- இஸ்ரேல் நட்புறவை அதிகரிப்பது குறித்து பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்தினோம்.” என்று பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பென்னட் மோடியுடனான சந்திப்பின்போது, “தங்களுக்கு நன்றிகள் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இந்தியா மற்றும் இஸ்ரேல் உறவை மீண்டும் புதுப்பித்தவர் நீங்கள். இந்திய- இஸ்ரேல் நாகரிகத்தின் இடையே ஆழமாக உறவு உள்ளது. இந்திய மற்றும் யூத கலாச்சாரங்கள் இடையேயும். இது ஆர்வத்தினால் வருவது அல்ல. இதயத்தில் இருந்து வருகிறது என்பது எனக்கு தெரியும். இது நீங்கள் வைத்திருக்கும் ஆழமான நம்பிக்கையை பற்றியது. நாங்கள் அதை உணர்கிறோம்” என்று பிரதமர் மோடியிடம் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
ரோமில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு, கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாநாடு ஆகியவற்றை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி நேற்று இந்தியா திரும்பினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்