காலிஸ்தான் பிரிவினைவாதிகள் செய்யும் செயல்கள் இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. சமீபத்தில் கூட, வெளிநாட்டில் உள்ள இந்திய தூதரகங்களை காலிஸ்தானி ஆதரவாளர்கள் சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக, காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன்,  ஏர் இந்தியா விமான பயணிகளுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்திருந்தார். 


"நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்துவோம்"


இச்சூழலில், டிசம்பர் 13ஆம் தேதிக்கு முன்போ அல்லது அதே தேதியிலோ இந்திய நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்படும் என குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்திருந்தார். கடந்த 2001ஆம் ஆண்டு, டிசம்பர் 13ஆம் தேதி, இந்திய நாடாளுமன்றம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தாக்குதல் நடத்திய 5 பேர் உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.


நாடாளுமன்ற தாக்குதல் நடந்த அதே தேதியில், தாக்குதல் நடத்தப்படும் என பன்னுன் மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை கிளப்பியது.  நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருவதையொட்டி டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.


பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி பேசுகையில், "நாடாளுமன்றம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். நாடாளுமன்றம் இயங்கி வருவதால், ​​நாங்கள் கவனமுடன் இருக்கிறோம். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்" என்றார்.


பதிலடி தந்த மத்திய அரசு:


இந்த நிலையில், பன்னுன் விடுத்த மிரட்டலுக்கு இந்தியா எதிர்வினை ஆற்றியுள்ளது. இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "பாதுகாப்பு விவகாரங்களில் கருத்துத் தெரிவிக்க நான் சரியான நபர் இல்லை. 


இருப்பினும், இந்த மாதிரியான அச்சுறுத்தல்களை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். நாம் இங்கே ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியுள்ளோம். விளம்பரத்துக்காக மிரட்டல் விடுக்கும் இத்தகைய தீவிரவாதிகளை நான் பெரிதாக்கவோ அல்லது அதிக முக்கியத்துவம் வழங்கவோ விரும்பவில்லை. மறுபுறம், நாங்கள் இதை தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். இந்த குறிப்பிட்ட விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் கனடா அதிகாரிகளுடன் இந்த விஷயத்தை எடுத்து சென்றுள்ளோம்" என்றார்.


கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவுக்கு ஏற்கனவே பெரும் தலைவலியாக மாறிய நிலையில், மற்றொரு காலிஸ்தான் பிரிவினைவாதியான பன்னுனை கொலை செய்ய இந்தியா திட்டமிட்டதாகவும் இதை அமெரிக்க தடுத்து நிறுத்தியதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியிருந்தது.


இந்தியாவுக்கு குடைச்சல் தந்து வரும் சீக்கிய பிரிவினைவாதியான குர்பத்வந்த் சிங் பன்னூனை அமெரிக்காவில் வைத்து கொல்ல திட்டமிடப்பட்டதாகவும் அந்த முயற்சியை அமெரிக்கா தடுத்து நிறுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள இந்தியா அதிகாரி ஒருவர்தான் இந்த சதி திட்டத்தை தீட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.