அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதில் கடுமையாக நடந்து வருகிறார் அந்நாட்டு அதிபர் ட்ரம்ப். ஆனால், 2 விதமான துறைகளில் உள்ளவர்களுக்கு மட்டும், தற்காலிக அனுமதி அட்டை வழங்க முடிவெடுத்துள்ளா. அது தொடர்பாகவே, தானும் ஒரு விவசாயி என அவர் குறிப்பிட்டுள்ளார். என்ன விஷயம் என்று பார்க்கலாம், வாருங்கள்.
“விவசாயிகள், சேவை துறைகளில் உள்ளவர்களுக்கு தற்காலிக பாஸ்“
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ட்ரம்ப் அரங்கேற்றிவரும் அதிரடிகளில் ஒன்று, சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் குடியேறியவர்களை, அந்நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கை தான். இதில் மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆஃபிசராக இருக்கும் அவருக்கு, விவசாயிகள், சேவை துறைகளில் உள்ளவர்கள் மீது திடீர் பாசம் ஏற்பட்டுள்ளது.
அதனால், விவசாயம் மற்றும் விருந்தோம்பல், அதாவது சேவை துறைகளில் உள்ளோருக்கு மட்டும், தற்காலிக அனுமதி அட்டையை வழங்க அவர் முடிவெடுத்துள்ளார். இது தொடர்பாக ஊடகம் ஒன்றிற்க பேட்டியளித்துள்ள அவர், விவசாயிகளை தாம் பெரிதும் மதிப்பதாகவும், அதனால், தனது நிர்வாகம் சட்டவிரோதமாக குடியேறி, விவசாய பணிகளில் ஈடுபடுவோரை வெளியேற்றாமல், தற்காலிகமாக பாஸ் ஒன்றை வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து ஆரய்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இதேபோல், ஹோட்டல்கள் போன்ற சேவைத் துறைகளில் பணிபுரியும் சட்டவிரோத குடியேறிகளுக்கும் தற்காலிக பாஸ் வழங்கப்படும் என்றும் இந்த மாதத்தின் துவக்கத்திலேயே அவர் தெரிவித்துள்ளார். அதன் காரணமாக, விவசாயம் மற்றும் ஹோட்டல்களில் சட்டவிரோத குடியேறிகளை கண்டறிவதற்கான ரெய்டு நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, விவசாயத் துறையில் 15, 20 ஆண்டுகளாக பணியாற்றுபவர்கள், சட்டவிரோதமாக குடியேறியிருந்தாலும், நல்லவர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும், அவர்களை அங்கு பொறுப்பாக இருக்க அனுமதிக்கலாம் என்று கருதுவதாக ட்ரம்ப் கூறியுள்ளார். எந்த ஒரு விவசாயியும் ஒரு கொலைகாரனை வேலைக்கு அமர்த்தப்போவதில்லை என்பது அவருக்கு தெரியும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
விவசாயம் போன்ற கடுமையான பணியை, வேறு யாரும் செய்யாத பட்சத்தில், அங்கு 9 ஆண்டுகளாக பணியாற்றுபவர்களை வெளியேற்றிவிட்டால், அது விவசாயத்தையே அழிக்கும் செயலாகிவிடும் எனறும், அது ஒரு பிரச்னை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
“நான் ஒரு வலிமையான விவசாயி“
நான் இரண்டு பக்கமுமே இருப்பேன், இதுவரை இல்லாத அளவு குடியேற்றத்தில் நான் வலிமையானவனாக இருந்தாலும், இதுவரை இல்லாத அளவில் நான் ஒரு வலிமையான விவசாயியும் கூட என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதேபோல், ஹோட்டல்கள், மக்கள் பணிபுரியும் இடங்கள், ஒரு குழுவினராக பணிபுரியும் இடங்களுக்கும் இது பொருந்தும் என ட்ரம்ப் கூறியுள்ளார். வரி செலுத்தும் மக்களுக்கு தற்காலிக பாஸ் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதை வைத்திருக்கும் விவசாயிகளை, யாராவது புகுந்து மொத்தமாக வெளியேற்ற முடியாமல் செய்வதற்கு அது உதவும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இது குறித்த தனது சமூக வலைதள பக்கத்தில், கடந்த 12-ம் தேதியே ட்ரம்ப் எழுதியுள்ளார். அதில், ஹோடல்கள் மற்றும் ஓய்வு தொடர்பான தொழிலில் உள்ளவர்கள், அமெரிக்க நிர்வாகத்தின் குடியேற்ற கொள்கைகள், நீண்ட நாட்களாக தங்களிடம் பணிபுரியும், எளிதாக மாற்ற இயலாத விவசாயிகளை அவர்களிடமிருந்து வெளியேற்றும் விதமாக உள்ளதாக கூறியுள்ளனர் என்றும், அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக, மாற்றம் வருகிறது, நாம் விவசாயிகளை காக்க வேண்டும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.