MOP Bomb GBU-57: அமெரிக்கா வசம் உள்ள அணு ஆயுதம் அல்லாத மிகப்பெரிய ஏவுகணை வெடிகுண்டாக இந்த ”பங்கர் பஸ்டர் பாம்” கருதப்படுகிறது.
ஈரானை தாக்கிய அமெரிக்கா:
ஈரானின் அணு ஆய்வு மையங்களை குறிவைத்தை, இன்று காலையில் அமெரிக்கா மூன்று இடங்களில் தாக்குதலை நடத்தியது. குறிப்பாக ஃபோர்டோபில் உள்ள அணு ஆயுத மையத்தில் 5 முதல் 6 முறை வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலுக்கு தனது மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணையான மேசிவ் ஆர்டினன்ஸ் பெனட்ரேடர் (MOP) எனப்படும் பதுங்கு குழிகளை அழிக்க வல்ல வெடிகுண்டுகளை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது. அதன் விளைவாக ஃபோர்டோ அழிந்துவிட்டது என்றும், இஸ்ஃபஹான் மற்றும் நாடன்ஸ் அணுசக்தி நிலையங்களும் தாக்கப்பட்டதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
MOP வெடிகுண்டின் திறன்:
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் MOP வெடிகுண்டின் செயல்திறன் தொடராக விளக்கினார். அதன்படி, “ஃபோர்டோ பகுதியில் 6 பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசப்பட்டன. அவை ஒவ்வொன்றும் 30 ஆயிரம் பவுண்ட்ஸ் அதாவது 13 ஆயிரத்து 600 கிலோ எடை கொண்டவை. இதுபோக கடற்படை கப்பல்களில் இருந்து 30 தோமாஹாவ்க் லேண்ட் அட்டாக் ஏவுகணைகளை இஸ்ஃபஹான் மற்றும் நாடன்ஸ் நோக்குஇ செலுத்தினோம். இதனால் மூன்று அணு ஆயுத மையங்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஃபோர்டோவில் உள்ள மலையின் அடிப்பகுதியில் யுரேனியம் செறிவூட்டல் மையத்தை ஈரான் மிகவும் பாதுகாப்பாக மேம்படுத்தி உள்ளதாக ஏராளமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதனை அமெரிக்கா வசம் உள்ள MOP வெடிகுண்டின் மூலம் மட்டுமே தகர்க்க முடியும் என கூறப்பட்ட நிலையில், ட்ரம்ப் உத்தரவின்பேரில் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
MOP என்றால் என்ன?
GBU-57 மேசிவ் ஆர்டினன்ஸ் பெனட்ரேடர் என்பது அமெரிக்காவின் ஆயுதக் கிடங்கில் உள்ள, அணு ஆயுதம் அல்லாத மிகப்பெரிய வெடிகுண்டாகும். போயிங் மூலம் கட்டமைக்கப்பட்டு ஜிபிஎஸ் வாயிலாக இந்த வெடிகுண்டு வழிநடத்தப்படுகிறது. மிகவும் ஆழமாக வலுவாகவும் கட்டமைக்கப்பட்ட பதுங்குக் குழிகளை சிதைக்கும் வகையிலேயே இந்த வெடிகுண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட அமெரிக்க விமானப்படை தரவுகளின்படி, மேசிவ் ஆர்டினன்ஸ் பெனட்ரேடர் வெடிகுண்டானது 20.5 அடி நீளம் மற்றும் 31.5 இன்ச் விட்டமும் கொண்டிருக்கும். 2400 கிலோ எடையிலான வெடிபொருட்களுடன் சேர்ந்து, இந்த ஏவுகணை ஒட்டுமொத்தமாக 13 ஆயிரத்து 600 கிலோ எடையை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
MOP ஏன் மிகவும் சக்தி வாய்ந்தது?
இந்த வெடிகுண்டு வெடிப்பதற்கு முன்பு வலுவூட்டப்பட்ட கான்க்ரீட் வழியாக 200 அடிக்கு மேல் துளையிடும் திறன் கொண்டுள்ளது. உயர் செயல்திறன் கொண்ட எஃகு கலவையால் ஆன அதன் உறை, ஊடுருவலின் போது ஏற்படும் பெரும் உராய்வையும் தாங்கும் வல்லமை கொண்டுள்ளது. MOP இன் வெடிக்கும் சக்தி அதன் முன்னோடியான BLU-109 ஐ விட 10 மடங்கு அதிகமாக இருப்பதாக அமெரிக்க விமானப்படை தரவுகள் குறிப்பிடுகின்றன. மேசிவ் ஆர்டினன்ஸ் பெனட்ரேடரின் அளவு மற்றும் எடை காரணமாக, B-2 ஸ்பிரிட் ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானம் மட்டுமே இந்த வெடிகுண்டை சுமந்து சென்று இலக்கை நோக்கி ஏவும் திறன் கொண்டுள்ளது.
B-2 போர் விமானம்:
B-2 விமானத்தின் ஸ்டெல்த் திறன் ரேடார் மற்றும் வான் பாதுகாப்புகளை ஏமாற்ற அனுமதிக்கிறது, இது ஃபோர்டோ போன்ற பெரிதும் பாதுகாக்கப்பட்ட தளங்களைத் தாக்குவதற்கு ஏற்ற தேர்வாக அமைகிறது. ஒவ்வொரு B-2 விமானமும் அதன் உள் ஆயுத கிடங்கில் இரண்டு MOPகள் வரை சுமந்து செல்லக்கூடும். ஈரானின் அணுசக்தி தளங்களைத் தாக்கிய B-2 குண்டுவீச்சு விமானங்கள், அமெரிக்காவின் மிசோரியில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து நேரடியாக 37 மணி நேரம் இடைவிடாமல் பறந்ததாகவும், நீண்ட தூர பயணத்தின் போது பல முறை வானில் எரிபொருள் நிரப்பியதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவால் மட்டுமே முடியுமா?
60 முதல் 90 மீட்டர் ஆழத்தில் பாறைகளால் பாதுகாக்கப்பட்ட ஃபோர்டோவின் ஆழமாகப் புதைந்த உள்கட்டமைப்பை தாக்க, MOP போன்ற ஆயுதம் தேவைப்படும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் நீண்டகாலமாக தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு பதுங்கு குழியையும் தனித்தனியாக குறிவைத்து தாக்க முடியும், இதனால் ஒரு MOP க்கு மேல் மற்றொரு MOP-ஐ செலுத்த முடியும் என கூறப்படுகிறது. தாக்குதலுக்கான இலக்குகளை துல்லியமாக அடையாளம் காணம், அமெரிக்காவின் கண்காணிப்பு ட்ரோன்கள் உதவியிருக்கும் என வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த MOP, போயிங் நிறுவனத்தால் பென்டகன் ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது 20 யூனிட்களாகவது கட்டமைக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.