Israel Iran Strike: ஈரானின் வான் பரப்பின் மீது தற்போது நாங்கள் ஆதிக்கம் செலுத்துவதாக, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அறிவித்துள்ளார்.

”கமெனியை கொலை செய்ய வேண்டும்”

ஈரானின் உச்ச தலைவர் கமெனியை படுகொலை செய்வது பதட்டங்களை அதிகரிக்காது, மாறாக நடந்து வரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானிய தலைவரை கொல்லும் இஸ்ரேலின் திட்டத்தை எதிர்த்ததாக வெளியான தகவல் தொடர்பாக பேசுகையில். "இது மோதலை அதிகரிக்கப் போவதில்லை, மோதலை முடிவுக்குக் கொண்டுவரும்" என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

பதிலடி கொடுப்பது உறுதி - ஈரான்

இஸ்ரேல் தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால், தெஹ்ரான் பதிலடித் தாக்குதல்களைத் தொடரும் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி அறிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுதொடர்பான அறிக்கையில் "டெல் அவிவில் உள்ள முகாம்களில் மறைந்திருக்கும் போர்க் குற்றவாளிகள் தங்கள் குற்றங்களுக்காக தண்டிக்கப்படாமல் இருக்க மாட்டார்கள் என்பதை நமது சக்திவாய்ந்த ஆயுதப் படைகள் உலகிற்கு தெளிவுபடுத்துகின்றன. கோழைகள் இனி நம் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய, தேவைப்படும் வரை நாங்கள் அவர்களைத் தொடர்ந்து தாக்குவோம்" என்று ஈரான் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஈரான் வானிவெளி எங்கள் கட்டுப்பாட்டில் - இஸ்ரேல்

போர் பதற்ற சூழலுக்கு மத்தியில் இஸ்ரேலியப் படைகள் ஈரான் வான்பரப்பை கட்டுப்படுத்துவதாக நேதன்யாகு அறிவித்துள்ளார். அவர்களிடமிருந்து எங்கள் நாட்டிற்கான அணுசக்தி அச்சுறுத்தலை நீக்குதல் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தலை நீக்குதல் ஆகிய இரண்டு நோக்கங்களை அடைவதற்கான பாதையில் நாங்கள் இருக்கிறோம் என்று விளக்கமளித்துள்ளார். வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ஆபரேஷன் ரைசிங் லயன் என்று அழைக்கப்படும் ஒரு திடீர் தாக்குதலைத் தொடங்கிய பின்னர் வெடித்த இந்த மோதலில், இரு தரப்பிலும் ஏற்கனவே ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ளன. 

தொலைக்காட்சி நிலையம் மீது தாக்குதல்:

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலின் போது ஈரானிய அரசு தொலைக்காட்சி நிலையமான IRIB அலுவலகம் தாக்கப்பட்டது, இதனால் நேரடி ஒளிபரப்பு திடீரென நிறுத்தப்பட்டது. நேரலையின் போது நடந்த தாக்குதலால் அதிர்ச்சியடைந்த செய்தி வாசிப்பாளர் உடனடியாக அங்கிருந்து பதற்றத்துடன் வெளியேறினார். கட்டிடம் தீப்பிழம்புகளாலும் அடர்ந்த புகையாலும் சூழப்பட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன. நேரடி ஒளிபரப்பின் போது IRIB அலுவலகங்கள் மீதான தாக்குதல் ஒரு தீய செயல் மற்றும் போர்க்குற்றம் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது.

”தெஹ்ரானை விட்டு வெளியேறுங்கள்”

இதனிடையே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் சொன்னபடி ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்க வேண்டும். அதை செய்யாதது பெரிய அவமானம். எளிமையாக சொல்ல வேண்டுமானால், ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்கக் கூடாது.  மீண்டும் மீண்டும் நான் அதை சொன்னேன். அனைவரும் உடனடியாக தெஹ்ரானை விட்டு வெளியேற வேண்டும்” என எச்சரித்துள்ளார்.