Israel Iran Conflict: ஈரானின் உச்சபட்ச தலைவர் காமெனியை கொல்ல திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சரமாரியாக ஏவுகணை தாக்குதல்:
இஸ்ரேல் மற்றும் ஈரானின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. அதன் விளைவாக ஞாயிற்றுக்கிழமை இரவும், இஸ்ரேலின் வான்வெளியில் ஈரானின் ஏவுகணைகள் ஏராளமாக சீறிப்பாய்ந்தன. இஸ்ரேல் ராணுவத்தின் வான் பாதுகாப்பு அம்சங்கள் பல ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்தாலும் சில ஏவுகணைகள் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் போன்ற பகுதிகளில் வீழ்ந்து வெடித்தன. ஈரானிற்கு தக்க பதிலடி கொடுத்ததோடு, தென்மேற்கு பிராந்தியத்தில் வான் பாதுகாப்பு அமைப்புகளை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தது.
ஈரானிய ஏவுகணைகளின் சரமாரியான தாக்குதலால் இஸ்ரேலில் பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. ஹைஃபா நகரில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுவரை சரமாரியான தாக்குதலில் இஸ்ரேலில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு நிகராக ஈரானிலும் சேதங்கள் மதிப்பிடப்படுகின்றன.
ஈரான் உளவுத்துறை அதிகாரிகளை கொன்ற இஸ்ரேல்
போர் பதற்றங்களுக்கு மத்தியில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, “தலைமை உளவுத்துறை அதிகாரியையும் அவரது துணை அதிகாரியையும் தெஹ்ரானில் கொன்றோம். அந்த நபர்கள் பிரிகேடியர் ஜெனரல் முகமது கசெமி மற்றும் ஜெனரல் ஹசன் மொஹாகிக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார். அதோடு, வடகிழக்கு ஈரானின் மஷாத் விமான நிலையத்தில் ஈரானிய எரிபொருள் நிரப்பும் தளத்தை இஸ்ரேலிய விமானப்படை தாக்கியது. இஸ்ரேலிலிருந்து 2,300 கிலோ மீட்டர் தொலைவில் அந்த தளம் அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, ஆப்ரேஷன் ரைசிங் லயன் திட்டம் தொடங்கியதிலிருந்து நடத்தப்பட்ட மிக தொலைதூரத் தாக்குதல் இது என கூறப்படுகிறது.
ஈரானின் உச்சபட்ச தலைவரை கொல்ல திட்டம்:
இதனிடையே, ஈரானின் உச்சபட்ச தலைவரான காமெனியை கொல்ல இஸ்ரேல் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் பேசியபோது, “ஈரானியர்கள் அமெரிக்கர்கள் யாரையாவது கொலை செய்தார்களா? இல்லை. அதுபோன்ற செயல்களை செய்யும் வரையில், அரசியல் தலைவர்களை கொல்வது குறித்து நாம் பேசக்கூட கூடாது”என ட்ரம்ப் பதிலளித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி பேட்டியில் பேசிய நேதன்யாகு, “தவறான செய்திகளுக்கு உள்ளே நான் போக விரும்பவில்லை. ஆனால், நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்கிறோம், செய்ய வேண்டியதைச் செய்வோம் என்று நான் நினைக்கிறேன். அமெரிக்காவிற்கு எது நல்லது என்று அமெரிக்காவிற்குத் தெரியும் என்று நான் நினைக்கிறேன்” என பதிலளித்துள்ளார்.
ஈரானில் சேதம்:
வாஷிங்டனை தளமாகக் கொண்ட மனித உரிமை ஆர்வலர்களின் கூற்றுப்படி, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஈரானில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 406 ஐ எட்டியுள்ளது, 654 பேர் காயமடைந்துள்ளனர் .