பாலஸ்தீன பகுதியான காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போர் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தொடங்கிய போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தாக்குதலை பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தொடங்கியிருந்தாலும், தற்காத்து கொள்கிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் அப்பட்டமான போர் விதி மீறல்களில் ஈடுபட்டு வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.


போரால் நிலைகுலைந்த அப்பாவி மக்கள்:


இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலில் இதுவரை, 10,569 பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 40 சதவிகிதத்தினர் குழந்தைகள். பெண்களும் அதிக அளவில் கொல்லப்பட்டுள்ளனர். மருத்துவமனை, அகதிகள் முகாம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் மனிதத்தை கேள்விக்குள்ளாக்கி வருகிறது.


போரால் உடைமைகளை இழந்து சிக்கித் தவித்து வரும் மக்களுக்கு டிரக் மூலம் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை ஐநா வழங்கி வந்தது. ஆனால், போர் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், காசாவில் அவசர உதவிகள் அனைத்தும் தடைப்பட்டுள்ளன. போர் நிறுத்தம் அறிவிக்கக் கோரி அரபு நாடுகள் வலியுறுத்தி வருகிறது.


மனிதாபிமான அடிப்படையில் போரை தள்ளி வைக்க வேண்டும் என அமெரிக்க, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், இஸ்ரேல் அதை முற்றிலுமாக நிராகரித்து வந்தது. 


பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்:


இந்த நிலையில், மூன்று நாள் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டுமானால், ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்துள்ள 12 பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என இஸ்ரேல் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் நடந்து வரும் பகுதிக்குள் எரிபொருள் உள்பட கூடுதல் அத்தியாவசிய பொருள்களை கொண்டு செல்ல பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இஸ்ரேல், ஹமாஸ் ஆகிய இரு தரப்பிடமும் கத்தார், எகிப்து, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, காசா பகுதியின் பாதுகாப்பை போருக்கு பிறகு காலவரையின்றி தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து கொள்வோம் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது. ஆனால், காசாவை பாலஸ்தீனியர்களே ஆள்வார்கள் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.


பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக உலகின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது. அந்த வகையில், லண்டனில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக நடைபெற உள்ள பேரணி தொடர்பாக பிரிட்டன் அரசுக்கும் லண்டன் காவல்துறை தலைவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த பிறகும், லண்டன்  காவல்துறை அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.


இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறுகையில், "பேரணிக்கு தடை செய்ய போதுமான காரணம் இல்லை என காவல்துறை தரப்பு விளக்கம் அளித்தது. ஆனால், அதற்கு பிறகு வரும் எந்த பிரச்சனைக்கும் காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும்" என்றார்.