Apple Founder: ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக்கிற்கு ஸ்ட்ரோக் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


ஆப்பிள் இணை நிறுவனருக்கு உடல்நிலை பாதிப்பு:


ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக், மெக்சிகோவில் நடைபெற்ற உலக வர்த்தக கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்றார். உள்ளூர் நேரப்படி மாலை 4:20 மணிக்கு மாநாட்டில் அவர் பேச திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், திடீரென அவருக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 73 வயதான ஸ்டீவ் வோஸ்னியாக்கிற்கு ஸ்ட்ரோக் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் தீவிர பாதிப்பு எதுவும் இல்லை என நம்பப்படுகிறது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் யாரும் இதுதொடர்பாக, இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.   


யார் இந்த ஸ்டீவ் வோஸ்னியாக்:


ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் வோஸ்னியாக் ஆகிய இருவரும் இணைந்து, 1976ம் ஆண்டு உருவாக்கிய ஆப்பிள் நிறுவனம் பெர்சனல் கம்ப்யூட்டிங்கில் புரட்சியை ஏற்படுத்தி உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக திகழ்கிறது.  மடிக்கணினிகள், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் மற்றும் ஐபோன் உள்ளிட்ட புதுமையான வடிவமைப்புகள் மற்றும் மின்சார சாதனங்களுக்கு பெயர் போன,  ஆப்பிளின் வெற்றிக்கு வோஸ்னியாக்கின் தொழில்நுட்ப திறமை முக்கிய காரணமாக அமைந்தது.


வோஸ்னியாக்கின் இளம் பருவம்:


1950 ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் சான் ஜோஸில் பிறந்த வோஸ்னியாக்ம் இளம்பருவத்தில் இருந்தே மின்சாதனங்கள் மீது அதீத ஆர்வம் கொண்டிருந்தார். இதன் விளைவாக 11வது வயதிலேயே தனது முதல் கணினியை உருவாக்கினார். பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்தார். 1975 ஆம் ஆண்டில் தனது நண்பர் ஸ்டீவ் ஜாப்ஸ் உடன் சேர்ந்து, அவரது பெற்றோரின் கேரேஜில் ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை நிறுவினர். வோஸ்னியாக் ஆப்பிள் I மற்றும் ஆப்பிள் II ஐ வடிவமைத்தார், இவை இரண்டுமே வணிக ரீதியாக வெற்றி பெற்ற முதல் தனிப்பட்ட கணினிகள் ஆகும்.


ஆப்பிளில் இருந்து வெளியேறிய வோஸ்னியாக்:


1987ம் ஆண்டு ஆப்பிளை விட்டு வெளியேறிய பிறகு, கல்வி மென்பொருளை உருவாக்கி விற்பனை செய்யும் வீல்ஸ் ஆஃப் ஜீயஸ் என்ற நிறுவனத்தை வோஸ்னியாக் நிறுவினார்.  பல்வேறு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றியதோடு, பல தொண்டு நிறுவனங்களில் பங்களித்துள்ளார். வோஸ்னியாக், கம்ப்யூட்டர் துறையில் ஆற்றிய பங்களிப்புகளுக்காக ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். நேஷனல் இன்வென்டர்ஸ் ஹால் ஆஃப் ஃபேம் மற்றும் கலிபோர்னியா ஹால் ஆஃப் ஃபேமில் உறுப்பினராக உள்ளார்.


ஆப்பிளின் அன்றாட நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும், வோஸ்னியாக் தொழில்நுட்ப உலகில் செல்வாக்கு மிக்க நபராக இருக்கிறார். ஆப்பிளின் இணை நிறுவனர் முதல் அவரது தற்போதைய செயல்பாடுகள் வரையிலான அவரது பயணம், தொழில்நுட்பத்தையும் தாண்டி  ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.