இஸ்ரேல் - காஸா போர்:


இஸ்ரேல் மற்றும் காஸா இடையேயான போர் தற்போது ஒரு மாதத்தை எட்டியுள்ளது. அதன்படி கடந்த மாதம் 7 ஆம் தேதி தொடங்கிய இந்த போரில் பல ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர். குறிப்பாக இதில் 3, 500 -க்கும் அதிமனானவர்கள் குழந்தைகள் என்று காஸா தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் கோர தாக்குதல் காரணமாக, காஸா பகுதியே நரகமாக மாறி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் இந்த கோர தாக்குதல்கள் குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.


பலியாகும் அப்பாவி குழந்தைகள்:


இது தொடர்பாக அவர் இன்று (நவம்பர் 3) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எல்லா நாளும் 10 வயதுக்கு உட்பட்ட அப்பாவி குழந்தைகள் இறக்கிறார்கள்.  இந்த உலகம் அமைதியாக இருக்கிறது.  ஒரு விளையாட்டு வீரனாக, என்னால் பேச மட்டுமே முடிகிறது, ஆனால் உலக தலைவர்கள் ஒன்று கூடி இந்த கருணையற்ற கொலைகளை நிறுத்த வேண்டிய உச்சகட்ட நேரம் இது” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.


தற்போது இவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இது போன்ற போர் அப்பாவி மக்களின் உயிரைத்தான் பறிக்கிறது என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். அதேபோல், இந்த போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


ஆனால், அங்கு நிலவும் அசாதாரண சூழலை தடுத்து நிறுத்த வேண்டிய சக்தி உலகக் தலைவர்களிடம் தான் இருக்கிறது. எனவே, உலகக் தலைவர்கள் மனது வைத்தால் மட்டும் தான் மேலும் இது போன்ற அப்பாவி உயிர்கள் பறிபோவதை தடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.