அமெரிக்கா மற்றும் பிரிட்டனால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர், உலக மக்களின் மனசாட்சியை உலுக்கி வருகிறது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே,கடந்த 7ஆம் தேதி மோதல் தொடங்கியது.
அப்பாவி மக்களை கொன்று குவித்து வரும் இஸ்ரேல் போர்:
இரு தரப்பிலும் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக, பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் வான்வழி தாக்குகதல் உலக மக்களின் மனசாட்சியை தட்டி எழுப்பியுள்ளது.
காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை, 2,300 குழந்தைகள் 1,100 பெண்கள் உள்பட 5,700 பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு புறத்தில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என அரபு நாடுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், மேற்குலக நாட்டின் தலைவர்கள் இஸ்ரேலுக்கு சென்று அந்நாட்டுக்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இஸ்ரேல் விவகாரத்தால் ஐநா பாதுகாப்பு கவுன்சிலிலும் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. காசா தொடர்பான விவாதத்தின்போது இது எதிரொலித்தது. விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், "காசாவில் சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளது. இஸ்ரேலில் உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும்" என்றார்.
ஐநாவில் அனல் பறந்த விவாதம்:
தொடர்ந்து பேசிய அவர், "ஹமாஸ் அமைப்பின் பயங்கரவாத தாக்குதலுக்கு எந்த மன்னிப்பும் வழங்க முடியாது. அதே சமயத்தில், பாலஸ்தீனியர்கள் அனைவருக்கும் தண்டனை வழங்கக் கூடாது. காசாவில் சர்வதேச மனிதாபிமான சட்டம் தெளிவாக மீறப்பட்டு வருவதை நாம் பார்த்து வருகிறோம். இதுகுறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன்.
நான் தெளிவாக கூறுகிறேன். ஆயுத மோதலில் ஈடுபடும் எந்தவொரு தரப்பினரும் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலை தனித்த சம்பவமாக பார்க்க முடியாது. கடந்த 56 ஆண்டுகளாக பாலஸ்தீனியர்கள் ஆக்கிரமிப்பால் அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ளனர்" என்றார்.
ஐநா கூட்டத்தில் கலந்து கொண்ட இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹனை, ஐநா தலைவரின் கருத்து, கோபத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து விளக்கம் அளித்த அவர், "நீங்கள், எந்த உலகத்தில் வாழ்கிறீர்கள். 2005ஆம் ஆண்டு, ராணுவத்தை திரும்பப் பெற்றதன் மூலம் காஸாவின் கடைசி மில்லிமீட்டர் இடம் வரை பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேல் வழங்கியது" என்றார்.
இதற்கிடையே பேசிய பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சர், "இந்த மோதலில் உலக நாடுகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலும் அப்பாவி மக்களே கொல்லப்பட்டுள்ளனர்" என்றார். இதனிடையே, ஐநா தலைவர் பதவி விலக வேண்டும் என ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க: Vladimir Putin: சிதறி கிடந்த உணவு.. தரையில் படுத்திருந்த புதின்.. ரஷ்ய அதிபருக்கு என்னாச்சு? தொடரும் மர்மம்!