கனடாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு காரணமான நபரும் தற்கொலை செய்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


கனடாவில்  முந்தைய காலங்களை ஒப்பிடும்போது கடந்த 3 ஆண்டுகளில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பெருமளவும் குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் ஆங்காங்கே நடைபெறும் குற்ற சம்பவங்கள் அரசுக்கு பெரும் தலைவலியாக மாறுகிறது. கடந்த செப்டம்பர் மாதம், ஒட்டாவாவில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஆண்கள் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர். 


இப்படியான நிலையில் மீண்டும் அங்கு ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்று மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் வடக்கு ஒன்டாரியோ நகரில் கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 23) இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது. உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, இரவு 10.20 மணியளவில் அவரச போலீசுக்கு தகவல் வந்ததாகவும், உடனடியாக போலீசார் டான்கிரெட் தெருவின் உள்ள குடியிருப்பு ஒன்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயத்துடன் போராடிய 41 வயது நபரை கண்டுபிடித்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததாகவும் போலீசார் கூறியதாக தெரிவித்துள்ளது. 






அந்த நபர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்து விட்டார். மேலும் 10 நிமிடங்களுக்குப் பின் மீண்டும் அவரச போலீஸ் எண்ணுக்கு போன் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அருகிலுள்ள வீட்டில் சோதனை செய்த போது அங்கு 3 குழந்தைகள் குண்டு காயங்களோடு இறந்து கிடந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய 45 வயதுடைய நபர் தன்னை தானே சுட்டுக் கொன்று தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 


மேலும் இந்த மரணங்கள் அனைத்திற்கும் தொடர்பிருப்பதாகவும், குடும்ப பிரச்சினை காரணமாக கொலைகள் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள Sault Ste. Marie நகர மேயர் மேத்யூ ஷூமேக்கர், “நமது சமுதாயம் அனுபவித்த இதுபோன்ற ஒரு மாபெரும் இழப்பை நிவர்த்தி செய்ய வார்த்தைகள் இல்லை. இது சொல்ல முடியாத சோகம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க: துர்கா ஸ்டாலின் முதல் தமிழிசை வரை.. ரஜினிகாந்த் வீட்டில் திரண்ட முக்கிய அரசியல் புள்ளிகள்.. என்ன காரணம்?