Hamas Israel: போரை நிறுத்தப்போவதில்லை என, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அறிவித்துள்ளார்.


ஹமாஸ் தலைவரை கொன்றுவிட்டோம் - இஸ்ரேல்:


ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை இஸ்ரேல் ராணுவம் கொன்றதாக, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தொலைக்காட்ச் வாயிலாக அறிவித்துள்ளார். அதில், ”தீமை கடுமையான அடியை சந்தித்துள்ளது. நம்முன் உள்ள பணி இன்னும் முழுமையடையவில்லை. நமக்குத் தீங்கு விளைவிக்க முயற்சிப்பவர்கள் அனைவருக்கும் இதுதான் நடக்கும் என்பதை நாங்கள் இன்று நிரூபித்துள்ளோம். மேலும் நல்ல சக்திகள் எப்படி தீமை மற்றும் இருளின் சக்திகளை எப்போதும் வெல்ல முடியும் என்பதை காட்டியுள்ளோம். போர் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, அது விலை உயர்ந்தது" என்று நேதன்யாகு தெரிவித்துள்ளார்.


உறுதி செய்த பைடன்:


காசாவில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தும் DNA முடிவுகள் குறித்து இஸ்ரேல் தனக்குத் தெரிவித்ததாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "இது இஸ்ரேலுக்கும், அமெரிக்காவிற்கும், உலகிற்கும் ஒரு நல்ல நாள். கடந்த ஆண்டு முதல் சின்வாருக்கான இஸ்ரேலின் வேட்டைக்கு அமெரிக்க உளவுத்துறை பங்களித்தது” என்று பைடன் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், சின்வார் கொல்லப்பட்ட தகவலை, ஹமாஸ் அமைப்பு தற்போது வரை உறுதிப்படுத்தவில்லை.


முன்னேறும் இஸ்ரேல்:


சின்வாரின் மரணம் இஸ்ரேலிய ராணுவத்திற்கும், பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவிற்கும் பெரும் ஊக்கத்தை அளிக்கிறது. அந்நாட்டிற்கு எதிரிகளாக கருதப்படும் முக்கிய தலைவர்களுக்கு எதிராக இஸ்ரேல் சமீபத்திய மாதங்களில் நடத்திய உயர்மட்ட படுகொலைகளில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


கொல்லப்பட்டது எப்படி?


தெற்கு காசா பகுதியில் அமைந்துள்ள ரஃபா நகரில் நடத்தப்பட்ட தரைவழி தாக்குதலின்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நடவடிக்கையில் இஸ்ரேலிய படைகள் மூன்று தீவிரவாதிகளை கொன்று அவர்களின் உடல்களை கைப்பற்றியதாக இஸ்ரேலின் ராணுவ வானொலியை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  அந்த மூன்று பேரில் ஒருவர் சின்வாராக இருக்கலாம் என்றும், அதை உறுதிப்படுத்துவதற்காக டிஎன்ஏ சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் காட்சி ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. சின்வாரின் டிஎன்ஏ மாதிரிகள் அவர் இஸ்ரேலிய சிறையில் அடைக்கப்பட்டபோது இருந்து இஸ்ரேலிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.


அக்டோபர் 7, 2023 இல் காசா போருக்கு வழிவகுத்த இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு திட்டமிட்டவரான சின்வார், அன்றிலிருந்து இஸ்ரேலின் தேடப்படும் நபர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இருப்பினும், கடந்த இரண்டு தசாப்தங்களாக காசாவின் கீழ் ஹமாஸ் கட்டிய சுரங்கப் பாதைகளில் மறைந்திருந்து தப்பித்து வந்த நிலையில் தற்போது கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தொடரும் இஸ்ரேலின் கொலைகள்:


முன்னதாக அவர் காசா பகுதியில் ஹமாஸின் தலைவராக இருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் தெஹ்ரானில் முன்னாள் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனி, படுகொலை செய்யப்பட்ட பின்னர் ஹமாஸின் ஒட்டுமொத்த தலைவராக இவர் அறிவிக்கப்பட்டார்.


கடந்த மாதம், பெய்ரூட்டில் ஈரானிய ஆதரவு ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவையும் இஸ்ரேல் கொன்றது. குழுவின் ராணுவப் பிரிவின் உயர்மட்டத் தலைவர்களில் தோன்றிய பலர் இஸ்ரேலியப் படைகளால் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர்.


அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் தலைமையிலான ஆயுதப்படையினர் இஸ்ரேலைத் தாக்கி சுமார் 1,200 பேரைக் கொன்றனர் மற்றும் 250 க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை காசாவிற்குள் கொண்டு சென்றனர். அப்போதிருந்து,  இஸ்ரேல் நடத்தி வரும் பதிலடி தாக்குதலில் 42,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.