சில நாட்களுக்கு முன்பு தைவானைச் சுற்றிவளைத்து , கைப்பற்றுவது  போன்று, சீனா போர் ஒத்திகை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று போர் விமானங்களுடன் தைவான் எல்லைக்குள் சீனா நுழைந்திருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


சீனா - தைவான் பிரச்னை:


தைவான், தென் சீன கடல் பகுதிக்கு மேலேயும், கிழக்கு சீன கடல் பகுதிக்கு கீழேயும் அமைந்துள்ள ஒரு தீவாகும். இந்த பகுதியை சீனா, பல ஆண்டுகளாக , தனக்குச் சொந்தமான பகுதி என்றும், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் தெரிவித்து வருகிறது. ஆனால், தைவானில் ஆட்சி செய்யும் அரசு , அதை  முற்றிலும் மறுத்து, எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், அவ்வப்போது, போர் ஒத்திகை நடத்தி வரும் சீனா, சில நாட்களுக்கு முன்பு ,  தரைப்படை, கடற்படை , விமானப்படை உள்ளிட்ட படைகளை வைத்து, தைவானை கைப்பற்றுவது போன்று போர் ஒத்திகை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






அச்சுறுத்தும் சீனா:


இந்த ஆண்டு தொடக்கத்தில் , தைவானின் புதிய அதிபராக லாய் என்பவர் பதவியேற்றார். இவர் சீனாவுக்கு எதிரான போக்கை கடைபிடித்து வருகிறார். சமீபத்தில் அவர் பேசியதாவது “ நமது நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதிலும் மற்றும் நமது நாட்டை இணைக்கும் முயற்சியையும் எதிர்ப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்துதான், தைவானை கைப்பற்றும் வகையிலான போர் ஒத்திகையை சீனா நடத்தியிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.


மேலும், சீனா போர் ஒத்திகை நடத்திய நிலையில் தைவான் தெரிவித்ததாவது  “விமான படை, ராணுவம், கடற்படை ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருப்பதாக தெரிவித்தது. மேலும் தைவானின் ஜனநாயக அமைப்பையும், தேசிய பாதுகாப்பையும், அரசு பாதுகாக்கும் என்றும், ராணுவம் தயார்நிலையில் இருக்கும் வீடியோவையையும் தைவான் வெளியிட்டது.  


தக்க பதிலடி கொடுப்போம் - தைவான்


இந்த தருணத்தில், இன்று காலை சுமார் 20 போர் விமானங்களுடன், தைவான் எல்லைக்குள் சீனா நுழைந்ததாக தைவான் தெரிவித்துள்ளது. மேலும், நிலைமையை கவனித்து வருவதாகவும் , தக்க பதிலடி கொடுப்போம் எனவும் தைவான் தெரிவித்துள்ளது.