Israel Attacks Iran: ஈரானின் ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை தொடங்கியுள்ளது. 


ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்:


சனிக்கிழமை அதிகாலை ஈரானில் உள்ள ராணுவ இலக்குகள் மீது "துல்லியமான தாக்குதல்களை" நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது . இஸ்ரேல் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்த ஈரானின் தாக்குதலுக்கு பதிலடியாக தற்போது இந்த தாக்குதல் நிகழ்ந்த்தப்பட்டடுள்ளது. ஈரானின் அரசு தொலைக்காட்சியும் தலைநகர் தெஹ்ரானைச் சுற்றி பல வலுவான வெடிப்புகள் கேட்டதை உறுதிப்படுத்தியது. ஆனால் வெடிப்புகளுக்கான ஆதாரத்தைப் பற்றி அதிகாரப்பூர்வ கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஃபாக்ஸ் நியூஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கு சற்று முன்பு வெள்ளை மாளிகைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இஸ்ரேல் ராணுவம் விளக்கம்:


இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்களாக நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு விடையளிக்கும் வகையில், இப்போது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரானில் உள்ள ராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈரானில் உள்ள ஆட்சியும், பிராந்தியத்தில் உள்ள அதன் பினாமிகளும் அக்டோபர் 7 முதல் இஸ்ரேலை இடைவிடாமல் தாக்கி வருகின்றனர்.  ஈரானிய மண்ணில் இருந்து நேரடி தாக்குதல்கள் உட்பட ஏழு முனைகளில் இருந்து தாக்கப்படுகிறோம். உலகில் உள்ள மற்ற இறையாண்மை கொண்ட நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் பதிலளிக்கும் உரிமையும் கடமையும் உள்ளது. எங்கள் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் முழுமையாக அணிதிரட்டப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டையும் இஸ்ரேல் மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம்” என பதிவிடப்பட்டுள்ளது.


பதற்றத்தில் மத்திய கிழக்கு பிராந்தியம்:


அக்டோபர் 1ம் தேதி ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக, சனிக்கிழமையன்று அந்நாட்டில் உள்ள ராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இருப்பினும், இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை. இஸ்ரேலால் பல வாரங்களாக அச்சுறுத்தப்பட்ட இந்தத் தாக்குதல், தற்போது நிகழ்த்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் மீது ஹமாஸ் என்ற போராளிக் குழுவின் தாக்குதல் நிகழ்ந்த ஒரு வருடத்திற்கும் மேலாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவி வருகிறது.


பலமுனை போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல்:


ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை வேரறுப்பதாக சூளுரைத்து, லெபனான், பெய்ரூட் மற்றும் ஏமன் பகுதிகளில் இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஆனால், அவற்றின் பெரும்பாலானவை தடுத்து நிறுத்தப்பட்டதால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.