ஜம்மு காஷ்மீரில் நடக்கும் வன்முறை தாக்குதல்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதி காண வேண்டும் என்று தேசிய காங்கிரஸ் தலைவர் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.


ராணுவத்தினர் மீது தாக்குதல்:


நேற்று, வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள குல்மார்க் அருகே ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதில், இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் இரண்டு ராணுவ போர்ட்டர்கள் உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஒரு ராணுவ வீரர் மற்றும் ஒரு போர்ட்டர் காயமடைந்தனர்.   


குல்மார்க் தாக்குதலில் இறந்தவர்களுக்கு ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான ஃபரூக் அப்துல்லா, அஞ்சலி செலுத்தினார்.    


அப்போது ஃபரூக் அப்துல்லா பேசியதாவது” ஜம்மு காஷ்மீரில் வன்முறை தொடர்ந்து வருகிறது.  இந்தியாவும் பாகிஸ்தானும் நட்புறவுக்கான பாதையைக் கண்டுபிடிக்காத வரை, குல்மார்க் அருகே சமீபத்தில் நடந்த தாக்குதல் போன்ற தாக்குதல்கள் தொடரும்.


”பாகிஸ்தானுடன் சேர மாட்டோம் “


இந்த மாநிலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. அவை எங்கிருந்து வருகின்றன என்பது உங்களுக்குத் தெரியும், இந்தப் பிரச்சனையில் இருந்து மீள ஏதாவது வழி கிடைக்கும் வரை, இந்த பிரச்னை தீராது. கடந்த 30 ஆண்டுகளாக, நேரில் பார்த்து வருகிறேன் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர்.






நாங்கள் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறப் போவதில்லை, அவர்கள் ஏன் இதைச் செய்கிறார்கள்? நமது எதிர்காலத்தை சீர்குலைக்கவா மற்றும் நம்மை ஏழைகளாக்குவதற்காகவா என கேள்வி எழுப்பினார்.


ஜம்மு மற்றும் காஷ்மீரில் வன்முறையைத் தூண்டுவதை விட, பாகிஸ்தான் அதன் சொந்த சவால்களில் கவனம் செலுத்த வேண்டும், அவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள், நம்மையும் அழிக்கிறார்கள்" என்று அப்துல்லா குறிப்பிட்டார்.


ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை: 


பாகிஸ்தான் வன்முறையை நிறுத்தி, அமைதிக்கான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தியாவுடன் நட்புறவுக்கான போக்கை பாகிஸ்தான் கையாள வேண்டும்.


பாகிஸ்தான் அமைதிக்கான வழியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், எதிர்காலம் மிகவும் கடினமாக இருக்கும்," எனவும் பாகிஸ்தானுக்கு பரூக் அப்துல்லா எச்சரிக்கை விடுத்தார்.