வடக்கு காசாவின் ஜபாலியா பகுதியில் இருக்கு அகதிகள் முகாமில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 80 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் உலக நாடுகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாத காலமாக இந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் காசா மீது வான்வழி மற்றும் தரை வழி தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. தாக்குதலை பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தொடங்கியிருந்தாலும், தற்காத்து கொள்கிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் அப்பட்டமான போர் விதி மீறல்களில் ஈடுபட்டு வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலில் இதுவரை, 11,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வடக்கு காசாவின் ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள ஐ.நா. தங்குமிடங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் 80 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தெற்கு பகுதியில் தனது தாக்குதலை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில் அங்கு இருக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஐநா மனிதாபிமான தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் இதற்கு கடுமையான கண்டனங்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த வாரம், அல் ஷிபா மருத்துவமனைக்கு உள்ளே இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் புகுந்த சம்பவம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இதுவே காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையானயாக கருதப்படுகிறது. இந்த மருத்துவமனையின் கீழே யாருக்கும் தெரியாமல் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டு அறையை வைத்திருப்பதாக இஸ்ரேல் ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது.
மருத்துவமனையின் கீழே இருந்து கொண்டு, ஹமாஸ் அமைப்பினர் ரகசியமாக ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிலும் வரவேற்பு அறையிலும் புகுந்த ராணுவத்தினர், அங்கு இஸ்ரேல் பணயக்கைதிகள் எவரேனும் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றனரா என ஆராய்ந்து வருகின்றனர். மருத்துவமனை மீது நடத்திய தாக்குதலில் சுமார் 120 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.