ஆப்கானிஸ்தானை கடந்த சில தினங்களுக்கு முன்பு தலிபான்கள் கைப்பற்றினர். மேலும், அந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பையும் கைப்பற்றியுள்ளனர். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நல்லதொரு ஆட்சியை அமைக்க வேண்டும் என்று பலரும் மன்றாடி கேட்டு வருகின்றனர்.


இந்த நிலையில், தலிபான் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வகிதுல்லா ஹசீமி, உலகின் முன்னணி ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் எங்களது உல்மா( இஸ்லாமிய மதகுருமார்கள்) பெண்களை பள்ளிகளுக்கு அனுப்பலாமா அல்லது வேண்டாமா என்று முடிவு செய்வார்கள். மேலும், பெண்கள் ஹைஜப் அணிவதா அல்லது புர்கா அணிவதா அல்லது வேறு மாதிரி உடைகள் அணிவதா என்பது குறித்தும் தீர்மானிப்பார்கள். ஆப்கானிஸ்தானில் 99.99 சதவீத மக்கள் இஸ்லாமியர்கள். அவர்கள் இஸ்லாத்தை நம்புகிறார்கள்.




நீங்கள் இஸ்லாத்தின் விதிகளை நம்பும்போது, அதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். எங்களிடம் மிகவும் முக்கியமான உல்மாக்களின் குழு உள்ளது. என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்வார்கள்.” இவ்வாறு அவர் கூறினார்.


மேலும், கடந்த செவ்வாய்கிழமை தலிபான்களில் முக்கிய செய்தித்தொடர்பாளரான ஜபிபுல்லா முஜாஹித் அளித்த பேட்டியில், பெண்கள் வேலைக்கு செல்வதற்கும், பணிக்கு செல்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அது இஸ்லாமிய சட்டத்தின்படியே நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.


தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது முதல் அந்த நாட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் குறித்து உலகம் முழுவதும் மிகுந்த கவலை எழுந்தது. ஆனாலும், பெண்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்கு முன்புபோல செல்லலாம் என்று அறிவித்திருந்த தலிபான்கள், தற்போது இஸ்லாமிய மதகுருமார்களே பெண்கள் படிப்பது குறித்து முடிவெடுப்பார்கள் என்று கூறியிருப்பது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த தலிபான்கள். இஸ்லாமிய சட்டத்தின்படி ஆட்சி செய்வதாக கூறிக்கொண்டு பெண்கள் வேலைக்கு செல்வதற்கு தடை விதித்திருந்தது. பெண்கள் பள்ளிக்கு செல்வதற்கு அனுமதி மறுத்திருந்தது. பெண்கள் புர்கா அணியாமல் வெளியில் செல்வதற்கும் தடை விதித்திருந்தது. அவர்களின் விதிகளை மீறும் பெண்கள் பொது இடங்களில் தண்டிக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முழு சுதந்திரத்தை தலிபான்கள் அளிக்க வேண்டும் என்றும், அதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் பல்வேறு நாட்டு சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.