ஆப்கானிஸ்தானை பாகிஸ்தான் அபகரிக்கவும் முடியாது; தலிபான்களால் ஆப்கனில் ஒழுங்காக ஆட்சி செலுத்தவும் முடியாது என்று அம்ருல்லா சாலே தெரிவித்துள்ளார்.


ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ளது. ஆனால், அந்த ஆட்சிக்கு முதல் எதிர்ப்புக் குரலை பதிவு செய்தவர் தான் துணை அதிபர் அம்ருல்லா சாலே.


ஏற்கெனவே, தலிபான்களிடம் சரணடையமாட்டேன். அவர்களுக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டோம் என்று ட்விட்டரில் அவர் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். மேலும், துணை அதிபராக இருந்த தானே முறைப்படி அதிபராக இருக்க முடியும் என்றும் கூறினார்.


இந்நிலையில் அவர் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில், தேசங்கள். சட்டத்தின் மதிக்க வேண்டும். பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானை தன்னுடன் இணைத்துக் கொள்ள முடியாது. அதன் அபகரிப்பு எண்ணத்துக்கு ஆப்கானிஸ்தான் மிகவும் பெரிது, அதேபோல், தலிபான்கள் ஆட்சிக்கும் இது பெரியது. உங்கள் வரலாற்றில் தீவிரவாதிகளுக்கு தலை வணங்கியதாக ஓர் அத்தியாயத்தை எழுதி விடாதீர்கள் என்று பதிவிட்டுள்ளர்.


அமெரிக்க முன்னாள் அதிபரின் பேச்சுக்களை வடிவமைப்பவரான மைக்கேல் ஜோன்ஸ் ஆப்கானிஸ்தான் குறித்து ஒரு ட்வீட்டைப் பதிவிட்டிருந்தார். அதில், ஆப்கானிஸ்தான் முதன்முதலில் 2004ல் தான் அரசியல் சாசனத்தை வகுத்தது. அந்த அரசியல் சாசனத்தின்படி நிலைமைக்கு ஏற்றவாறு தேசத்தின் ஆட்சி அதிகாரம் அமையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் முதல் துணை அதிபராக இருந்த அம்ருல்லா சலே அதிபராக தன்னை அறிவித்துள்ளார். நாடுகள் சட்டத்திட்டத்தினை மதிக்க வேண்டும். வன்முறையை அல்ல என்று பதிவிட்டிருந்தார்.






அம்ருல்லாவும் அமெரிக்காவும்:


கடந்த 2001 செப்டம்பர் 11 அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது. அதன்பின் தலிபான்களை அமெரிக்கா அடக்க நினைத்தபோது சிஐஏவுக்கு சாலே நெருக்கமானார்.


அதன் விளைவு, ஆப்கானிஸ்தானில் 2004ல் ஜனநாயக ஆட்சி மலர்ந்த போது நாட்டின் தேசிய பாதுகாப்பு இயக்குநரகத்தின் தலைமைப் பதவியை அவர் அடைந்தார். ஆப்கானிஸ்தானில் உள்ள பாஸ்தோ மொழி பேசும் உளவாளிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் சாலே. இது அமெரிக்கப் படைகள் தலிபான் தலைவர்களைக் கண்டறிய பேருதவியாக அமைந்தது. அதுமட்டுமல்லாது பாகிஸ்தான் ராணுவம் தலிபான் படைகளுக்கு ஆதரவு அளிப்பதை அவர்தான் உறுதி செய்தார். தேசிய பாதுகாப்பு இயக்குநரகத்தில் இருந்த அவர் அதிபர் கனியை கைக்குள் போட்டுக் கொண்டு உள்துறை அமைச்சரானார். பின்னர் துணை அதிபர் பதவியையும் பெற்றார். ஆப்கானிஸ்தானின் முதல் துணை அதிபர் என்ற அந்தஸ்தை அவர் பெற்றார். 


சாலேவை கொலை செய்ய தலிபான்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் கூட அவர் வரும் பாதையில் தலிபான்கள் மிகப்பெரிய தாக்குதலை மேற்கொண்டனர். தாக்குதல் நடந்த சில மணி நேரத்திலேயே அவர் வீடியோவில் தோன்றினார். தலிபான்களுக்கு சிம்ம சொப்பனமாகவே அவர் இருந்து வருகிறார்.


ஆப்கானிஸ்தானில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் இருக்கக் கூடாது என நினைக்கின்றனர் தலிபான்கள். ஆனால், முழுக்க முழுக்க அமெரிக்க ஆதரவு பெற்ற அமருல்லா சாலே தன்னை அதிபர் எனக் கூறிவருகிறார். தலிபான்களுக்கு இப்போது மிகப்பரிய நெருக்கடியாக இருப்பது இவர் தான்.