சொன்னதைச் செய்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு.. குருத்வார் குண்டுவெடிப்புக்கு இதுதான் காரணம்!

முகமது நபிகள் குறித்த பாஜக நிர்வாகிகள் தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு எதிராக பல்வேறு நாடுகளில் போராட்டம் நடைபெற்றன.

Continues below advertisement

ஆப்கானிஸ்தான் குருத்வாராவில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. முகமது நபிகளை அவமதித்ததற்கு பழிவாங்கும் விதமாக குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

Continues below advertisement

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்கள் உலுக்கியுள்ளது. குருத்வாரா அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. பலமுறை துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. குருத்வாராவுக்கு உள்ளே 16 பக்தர்கள் இருந்துள்ளனர். அதில், இரண்டு பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஏழு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

முகமது நபிகள் குறித்த பாஜக நிர்வாகிகள் தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு எதிராக பல்வேறு நாடுகளில் போராட்டம் நடைபெற்றன. பாஜகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களான நுபூர் சர்மா, நவீன் குமார் ஆகியோர் முகமுது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரச்னையை தீர்க்கும் வகையில் அனைத்து மதங்களை மதிப்பதாக மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், இந்த சர்ச்சை தீர்ந்தபாடில்லை. 


ஈரான், ஈராக், குவைத், கத்தார், சவுதி அரெபியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், மாலத்தீவுகள், லிப்யா, இந்தோனேசியா ஆகிய 15 நாடுகள் இந்திய அரசுக்கு எதிராக தங்களது அதிகாரப்பூர்வ எதிர்ப்பினை தெரிவித்தன.

இதை கண்டித்துள்ள அந்த நாடுகள், இந்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்த பாஜக நிர்வாகிகளுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை கெடுத்துள்ளதாக விமர்சனம் மேற்கொண்டுள்ளன.

இதற்கு மத்தியில், விளக்கம் அளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், "கூறப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்துகள் எந்த விதத்திலும் இந்திய அரசின் கருத்துகளை பிரதிபலிக்கவில்லை. அவை, குறிப்பிட்ட ஒரு கும்பலின் கருத்து மட்டுமே" என தெரிவித்துள்ளது. 

சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு மத்தியில், இரண்டு செய்தி தொடர்பாளர்களையும் பாஜக கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "எந்த ஒரு மதத்தையும் அல்லது பிரிவினரையும் அவமதிக்கும் கொள்கைக்கு எதிராக உள்ளோம். அம்மாதிரியான நபர்களையோ அவர்களின் தத்துவத்தையோ ஊக்குவிக்கவில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


பாஜக செய்தி தொடர்பாளர்களின் கருத்தை கண்டித்துள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய ஐக்கிய நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்திய தூதர்களுக்கு கத்தார், ஈரான், குவைத் ஆகிய நாடுகள் சம்மன் அனுப்பியிருந்தன. இதற்கு, இந்திய தூதரகம் சார்பில் அறிக்கை மூலம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, இந்திய பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் சார்பில் கருத்து பதியப்பட்டது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola