எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் அடுத்த வாரம் முதல் அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் மூடப்படும் என இலங்கை அறிவித்துள்ளது. 


எரிவாயு பற்றாக்குறையால் பொருளாதார நெருக்கடியை சந்தித்து தவித்து வரும் இலங்கையில், பொது போக்குவரத்தில் மக்கள் கூட்டத்தை குறைக்க வீட்டிலிருந்து பணிபுரிய அரசு ஊழியர்களுக்கு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. 


அதிபர் கோத்தபய ராஜபக்ச தலைமையிலான அரசு, பொருளாதாரத்தை தவறாக கையாண்டதாக அவருக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.


இந்நிலையில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு அலுவலகங்களுக்கு வர வேண்டாம் என அரசு மற்றும் கல்வித்துறை ஊழியர்களை இலங்கை அரசு கேட்டு கொண்டுள்ளது. இதுகுறித்து அறிக்கையை பொது நிர்வாகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அத்தியாவசிய சேவை துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே, வெள்ளிக்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்பட்ட நிலையில், இம்மாதிரியான விடுமுறை நாள்களில் வீட்டில் தோட்டக்கலை மேற்கொண்டு குறுகிய கால பயிர்களை பயிரிட்டு உணவு பற்றாக்குறை தீர்க்க வேண்டும் என அரசு ஊழியர்களை இலங்கை அரசு வலியுறுத்தியுள்ளது.


போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்வது கடினமாக உள்ள நிலையில், அதற்கு தீர்வு காணும் வகையில் வீட்டிலிருந்து பணிபுரியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாத பார்க்கப்படுகிறது. 


இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர் சரிவை சந்தித்து வருவது அங்கு நிலைமையை மோசப்படுத்தியுள்ளது. ராஜபக்ச குடும்பத்தினர் தவறாக பொருளாதாரத்தை கையாண்டதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.


கொரோனாவால் சுற்றுலாத்துறை பாதிப்படைந்து வருவாயில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அங்கு அறிவிக்கப்பட்ட வரி குறைப்பு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. அதேபோல, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ரசாயன உரங்களுக்கு விதிக்கப்பட்ட தடை, விவசாயிகளை படுகுழியில் தள்ளியது.


பல மாதங்களாக நடைபெற்று வந்த போராட்டம், பிரதமராக பொறுப்பு வகித்த மஹிந்த ராஜபக்சவை பதவியிலிருந்து விலக செய்தது. ஆனால், அதிபர் பதவியிலிருந்து விலகுவதில்லை என்பதில் கோத்தபய உறுதியாக இருந்தார். நட்பு நாடுகளிடம் உதவிகளை பெறவும் சர்வதேச நிதியத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு நாட்டின் கடனை சீர் செய்ய புதிய பிரதமரை நியமித்தார்.


புதிய பிரதமராக பொறுப்பு ஏற்று கொண்ட விக்ரமசிங்க, "அடுத்த ஆறு மாதங்களில் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய நாட்டிற்கு 5 பில்லியன் டாலர்கள் தேவைப்படும் நமது அன்றாட வாழ்வில் இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள அதில் பெரும்பகுதி எரிபொருள் வாங்குவதை நோக்கிச் செல்கிறது. ஒரு மாதத்திற்கு 500 மில்லியன் டாலர் எரிபொருளுக்காக நாடு செலவிடுகிறது" என நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண