இலங்கை வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் நாட்டின் அதிபருக்கே எதிர்ப்பு கிளம்பி இருப்பது இந்த ஆட்சியில்தான்.
நாடாளுமன்றத்தில் நாட்டு அதிபரின் முகத்திற்கு முன்னே வீட்டுக்குச் செல்லுங்கள் எனக் கூறப்படுவது இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக இன்று பதிவாகியது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் நாட்டின் அதிபர் என்ற வகையில் எதிர்க்கட்சிகளோ, ஆளும் தரப்பு அமைச்சர்களோ மிகுந்த மரியாதையுடன் ,அடக்க ஒடுக்கத்துடன் அவர்கள் முன்னிலையில் இருப்பார்கள்.
ஆனால் கடந்த 10 வருடங்களை எடுத்து நோக்கும்போது இலங்கையின் அதிபர் மற்றும் பிரதமர் முக்கிய பதவிகளை வகிக்கும் அரசியல் தலைவர்களுக்கோ எந்த மரியாதையும் அங்கு கொடுக்கப்படுவதில்லை. ஆட்சியில் இருப்பவர்கள் யார் என எதிர்கட்சிகளுக்கு தெரியும், எதிர்கட்சிகள் யாரென அங்கிருக்கும் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தெரியும், ஆகவே அங்கு அவர்களுக்கு மரியாதை என்றால் என்னவென்றே தெரியாது.
இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக பதிவாகிய சம்பவம் தான் அதிபர் கோத்தபாய ராஜபக்ஷ சொல்லாமல் கொள்ளாமல் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறியது. திடீரென நாடாளுமன்றம் வந்த அதிபர் கோத்தபாய ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அருகில் அமர்ந்திருந்தார். சிறிது நேரத்தில் நாடாளுமன்றத்தில் அதிபர் கோத்தபாய ராஜபக்சவை நோக்கி கோட்டா கோ ஹோம் என எதிர்க்கட்சியினர் முழக்கமிட தொடங்கினர். அதுவும் சத்தமாக ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் , தமது மொழி பேசும் பெரும்பான்மையின சிங்கள அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாலேயே வரலாற்று நாயகர் என கொண்டாடப்பட்ட ஒரு அதிபர் ஏளனம் செய்யப்பட்டது, முதல் முறையாக இலங்கை நாடாளுமன்றத்தில் பதிவாகி இருக்கிறது. கோத்தபாய ராஜபக்ஷவை நோக்கி திரும்பி வீட்டிற்கு செல்லுங்கள் என எதிர் கட்சிகள் பதாகைகளை ஏந்தியவாறு முழக்கமிட்டு கத்தியது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. எதிர்க்கட்சியினரின் அமளிக்கிடையே, பத்து நிமிட முழக்கத்தின் பின்னர் அதிபர் கோத்தபாய ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறினார் .
நாடாளுமன்ற அவையில் பேச வந்த அவரை எதிர்க்கட்சிகள் இன்று பேசவிடவில்லை ,இந்த நிகழ்வை அருகில் நின்று கொண்டிருந்த அவரின் அண்ணனும் ,இலங்கையின் முன்னாள் அதிபரும், இலங்கையின் முன்னாள் பிரதமருமான ,மஹிந்த ராஜபக்ஷ அவதானித்து கொண்டிருந்தார்.
என்னதான் பெரும்பான்மை மொழி பேசும் சிங்கள மக்களும், அரசியல் எதிர்கட்சிகளும் இவர்களை ஆட்சியை விட்டு வெளியேறுங்கள் என கூறினாலும் அவர்கள் விட்ட பாடாக தெரியவில்லை.
பிரதமர் பதவியை துறந்த மஹிந்த ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றம் வந்திருந்தார். அதேபோன்று எதிர்பாராத விதமாக திடீரென அதிபர் கோத்தாபய ராஜபக்ஷவும் நாடாளுமன்றம் வந்திருந்தார். இவர்கள் இருவருக்கும் எதிராக கடந்த சில தினங்களாக, எதிர்க்கட்சி மற்றும் அரசியல் கட்சியினரால் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன .
அதாவது மஹிந்த ராஜபக்ஷ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு உடல்நிலை சரியில்லை எனவும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், அங்கு இருக்கும் சிங்கள மக்களால் இந்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன .
அதேபோன்று அதிபர் கோத்தாபய ராஜபக்ஷ வெளியே வராமல் ஒளிந்து கொண்டு உள்ளார் என அவர் குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வதந்திகளைக் களைவதற்காகவும், தாங்கள் நாட்டை விட்டு செல்லவில்லை, இங்குதான் இருக்கின்றோம் என மக்களுக்கு காட்டுவதற்காகவும் இன்று நாடாளுமன்றம் வந்திருந்தனர்.
ஆளும் கட்சி அமைச்சர்கள், எதிர்க்கட்சியினர் ,நாட்டு மக்கள், அந்நாட்டு மதத்தலைவர்கள் என சர்வதேசத் தலைவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து இவர்களை ஆட்சியை விட்டு செல்லுமாறு வலியுறுத்தியும் இணங்கியதாக தெரியவில்லை.
இலங்கை அரசியலில் ராஜபக்சவினர் இருக்கும் வரைக்கும் நாடு முன்னேறுமா என்பது அரசியல் கட்சிகளின் கையில் தான் இருக்கிறது .முக்கியமாக இன்று நாட்டு மக்கள் முகம் கொடுக்கும் அடிப்படை பிரச்சனைகளுக்கு சிறிய அளவேனும் தீர்வு வழங்குவதில் இந்த அரசியல் தலைவர்கள் முனைப்பு காட்டுவதாக தெரியவில்லை.
முக்கியமாக பொருட்களின் விலை ஏற்றம் என்பது விண்ணை தொடும் அளவில் உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த வாரம் 50 ஆயிரத்துக்கு விலைபோன சைக்கிள் தற்போது 60 ஆயிரம் ரூபாயாக உயர்ந்து இருக்கிறது. அதேபோல் கியர் வைத்த சைக்கிள் ரூ 77 ஆயிரம் ஆக விற்பனையாவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அதேபோல் இந்த சைக்கிள்களின் கையிருப்பும் இலங்கையில் முடிவடைந்து விட்டதாகவும், மக்களுக்கு தற்போது கொள்வனவு செய்ய சைக்கிளும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இருசக்கர வாகனங்கள் முச்சக்கர வண்டிகளுக்கு பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருட்கள் இல்லாததால் மக்கள் சைக்கிளை நாடத்தொடங்கினர். இந்நிலையில் இதனைப் பயன்படுத்திக் கொண்ட வியாபாரிகள், சைக்கிளின் விலையை உச்சபட்சமாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனாலும் தங்களின் தேவைக்கு தற்போது அது ஒன்றுதான் தீர்வாக இருக்கும் என அறிந்த மக்கள் எப்பாடுபட்டாவது ஒரு சைக்கிளையாவது வாங்கி விட வேண்டுமென முயற்சிக்கின்றனர். ஆனாலும் தற்போது 70 ஆயிரத்துக்கு மேல் விலை போகும் இந்த சைக்கிளின் கையிருப்பும் முடிந்துவிட்டது. மக்களின் அன்றாட வாழ்க்கை பெரும் திண்டாட்டமாகவை அமைந்திருக்கிறது. ஒருவேளை சோற்றுக்கு கூட கஷ்டப்படும் நிலையில் இன்று எத்தனையோ குடும்பங்கள் இருக்கின்றன. இவ்வாறு இருக்க நாட்டு மக்களின் பிரச்சனையை தீர்க்காமல் இவர்கள் நாடாளுமன்றத்தில் கூப்பாடு போடுவது எந்த வகையில் நியாயம் என மக்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
ஆகவே அரச தலைவர்கள், அமைச்சர்கள் ,ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என மக்களை வாக்கு வங்கிகளாக பயன்படுத்திக் கொண்டோர் இவர்கள் அனைவரும் ,மக்களின் அடிப்படை பிரச்சனைகளையாவது தீர்ப்பதற்கு முனைவார்களாயின் அதுவே சிறந்ததாகும். பொருட்களின் விலையை குறைக்காமல், வியாபாரிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தாங்கள் நினைத்த விலையில் ஐந்தாறு மடங்கு விலையை உயர்த்தி மக்களின் கையில் இருக்கும் குறைந்த இறுதி பணயிருப்பையும் சுரண்டுவதை உரிய துறை அமைச்சர்கள் கண்டுகொள்ளவில்லையா என பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் பெரும்பாலான மக்கள் தமது வாழ்வாதாரமாக கடல் தொழிலைத்தான் நம்பி இருக்கிறார்கள்.அங்கு தற்போது ஒரு கிலோ மீன் ரூ 3,000-க்கு விற்கப்படுவது சாதாரண விடயம் அல்ல. 100 ரூபாய் 200 ரூபாய்க்கு கிடைத்த மீன்கள் எல்லாம் இன்று ஆயிரக்கணக்கில் விற்பனையாவது பொருளாதார சிக்கலில் தவிக்கும் மக்களுக்கு இதுவும் ஒரு பேரிடியாகவே இருக்கிறது.
வருமானத்துக்கு வழியில்லாமல்,ஒரு தட்டில் சாப்பிடும் எத்தனையோ குடும்பங்களை காண முடிகிறது. ஆகவே இலங்கை அரசு விழித்துக் கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் ஆட்சியை விட்டு விலகி மக்களின் தீர்ப்புக்கு விட வேண்டும்.
மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் நிவாரணங்களை வழங்க வேண்டும் ஆனால் அதுவும் இல்லை. சராசரியாக ஒரு குடும்பம், உணவுக்காக ஒரு மாதத்திற்கு செலவிடும் தொகை என்பது குறைந்தது ஒரு லட்சத்துக்கு மேலாவதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியல்வாதிகளின் நாடகங்களால் சிதைந்து போனது மக்களின் வாழ்க்கை. மீண்டும் இலங்கை மக்கள் விழித்துக் கொள்ள வேண்டிய கடைசி சந்தர்ப்பம் இதுவாக தான் இருக்க முடியும். அரசியல்வாதிகள் குறித்து ஏற்கனவே வரலாற்றில் பல படிப்பினைகள் இருக்கின்றன. இனிமேலாவது வாக்களிக்க செல்லும் மக்கள் தங்கள் வாக்குகளை உரிய முறையில் ஒரு எதிர்கால சந்ததியினை ,நாட்டின் நலத்தினை கருத்தில் கொண்டு அடுத்து வரும் தலைவர்களை சிறந்த முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பெரும்பான்மையின சிங்களவர் ஒருவரை தான் ,பௌத்த தேசத்தை மதிப்பவரை தான் ,வரலாற்று நாயகரை தான் தேர்ந்தெடுப்போம் என சபதம் கொண்டு அளித்த வாக்கின் அடிப்படையில் ,இன்று நாட்டை கூறு கூறாக விற்றதன் பலனை அனுபவிப்பவர்கள் நாட்டு மக்கள் தான் அரசியல்வாதிகள் அல்ல. ஆகவே மக்கள் விழித்துக் கொள்வார்களாயின் இன்று இந்த அரசு மாற்றப்படும். இலங்கையின் சர்வ மத தலைவர்களும் இணைந்து ஒரு ஆட்சியை கலைத்து வீட்டிற்கு செல்லுங்கள் என பகிரங்கமாகவே கூறுவது இதுவே முதல் தடவையாகும். இருந்த போதும் ராஜபக்சவினர் தனது ஆட்சியை விட்டு செல்வதாகவே தெரியவில்லை.
வரலாற்று நாயகர்களை வரலாறு எப்போது மறக்காத அளவுக்கு பதிவு செய்து இருக்கிறார்கள் ராஜபக்ச குடும்பத்தினர்.