பொதுவாக விமானங்களில் பறக்கும் போது சிலருக்கு பயம் ஏற்படும். அதாவது நடுவானில் அவர்கள் செல்லும் விமானத்தில் கோளாறு எதுவும் ஏற்பட்டுவிடும் என்ற பயம் சிலருக்கு இருக்கும். அப்படி நடுவானில் பறந்து கொண்டிருந்தப் போது எமிரேட்ஸ் விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கோளாறு உடன் அந்த விமானம் 14 மணி நேரம் வானில் பறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
கடந்த 1-ஆம் தேதி துபாயிலிருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேயின் பகுதிக்கு எமிரேட்ஸ் ஏர்பஸ் 30 விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானம் புறப்பட்ட சில மணி துளிகளில் ஒரு சத்தம் கேட்டுள்ளது. அதை பயணிகள் கண்டறிந்து விமான ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளனர். எனினும் அந்த சத்தத்தை பொருட்படுத்தாமல் விமானம் தொடர்ந்து பறந்துள்ளது.
இந்த விமான சுமார் 13.5 மணி நேரம் தொடர்ச்சியாக பறந்துள்ளது. பிரிஸ்பேயின் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்பாக அங்கு உள்ள அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் அவசரகால உதவிகளை தயாராக வைத்திருந்தனர். எனினும் இந்த விமான சரியாக தரையிறங்கியது. விமானம் தரையிறங்கிய பின்பு பிரிஸ்பேயின் விமான நிலைய அதிகாரிகள் விமானத்தின் ஒரு பகுதியில் ஓட்டை ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த ஓட்டை எப்படி வந்தது என்பது தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர்.
ஓட்டை ஏற்பட காரணம் என்ன?
விமானத்தின் வெளிப்பகுதியில் இருக்கும் ஃப்ளேரிங் பகுதியில் ஏற்பட்ட சிறிய பிரச்னை காரணமாக இந்த ஓட்டை ஏற்பட்டிருக்கும் என்று கருதப்படுகிறது. எனினும் இந்த ஓட்டை விமானத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. ஆகவே விமானம் பாதுகாப்பான முறையில் தரையிறங்கியது. நடுவானில் விமானம் ஒன்று ஓட்டையுடன் பயணம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் அந்த ஓட்டையை ஆச்சரியத்துடன் பார்த்து வியந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் சில கோளாறு காரணமாக தரையிறங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில் தற்போது ஏமிரேட்ஸ் விமானத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்