குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த 22 வயதான மாஷா அமினி என்ற பெண் கடந்த செவ்வாய்கிழமை (13-ம் தேதி) தனது குடும்பத்துடன் தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார். அப்போது ஈரானில் உடை தொடர்பான நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்தும் நெறிமுறை காவல்துறை பிரிவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது.
அந்த நேரத்தில், நெறிமுறை காவல்துறை பிரிவு மாஷா அமினியின் குடும்பத்தை வழிமறித்து சோதனை மேற்கொண்டுள்ளது. அப்போது அமினி ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி அவரை கைது செய்து காவல்துறையினர் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றும் மாஷா பலத்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இதனால் வலிதாங்க முடியாத மாஷா அமினி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்று சோதனை மேற்கொண்டதில் மருத்துவர்கள் மாஷா கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் மாஷா உயிரிழந்தார். இந்த செய்தி அறிந்த பெண்கள் மாஷாவின் சொந்த ஊரான சஹிஸ் நகரில் ஒன்றாக திரண்டு போராட்டம் நடத்தினர்.
அன்றிலிருந்து இன்றுவரை இந்த போராட்டதால் ராணுவதினர் தாக்கியதில் சுமார் 50 பேர் பலியாகியுள்ளதாகவும், சுமார் 700 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது வரை ஈரானில் சுமார் 80 இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் பரவாமல் இருக்க ஈரானில் இணையதளங்கள் சேவை முடக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த ஜவத் ஹெய்டாரி என்ற நபரின் இறுதி சடங்கில் அவரது சகோதரி அரசுக்கு எதிராக தலைமுடி வெட்டிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதுகுறித்து, ஈரானிய பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான மசிஹ் அலினெஜாட், "ஈரானிய பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டுவதன் மூலம் தங்கள் வருத்தத்தையும் கோபத்தையும் காட்ட முயற்சிக்கிறார்கள்" என்று கூறினார்.
இந்த போராட்டங்களை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும், நாட்டிற்கு எதிராக போராடுபவர்களை தீர்க்கமாக கையாள வேண்டும் என்று ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி தெரிவித்தார்.