சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் தனது தோழியுடன் சென்ற பொழுது மாணவப் பத்திரிகையாளர் பெண் ஒருவருக்கு ஆட்டோ ஓட்டுனர் பாலியல் தொந்தரவு அளித்ததாக சமூக வலைதளம் மூலம் சம்பந்தப்பட்ட பெண் புகார் அளித்திருந்தார். மேலும் அப்பெண் தனது சமூக வலைதள பதிவில், இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்த பொழுது, பெண் பாலியல் தொந்தரவு தொடர்பாக புகார் அளித்தால் பெண் போலீசாரை அனுப்பாமல்,  மாணவிகள் தங்கியிருக்கும் விடுதிக்கு ஆண் போலீஸ் ஒருவரை அனுப்பியுள்ளனர். செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் நேரடியாக புகார் அளிக்க விடாமல் தொடர்ந்து தடுக்கும் வகையிலேயே காவலர்கள் பேசியதாகவும் மாணவிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். காவல் நிலையம் வெளியிலேயே நின்று கொண்டு காவல் நிலையத்தில் மனுவை எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்களும், சம்பந்தப்பட்ட ஊபர் ஆட்டோ ஓட்டுநரின் புகைப்படம், ஆட்டோவின் புகைப்படம் உள்ளிட்டவைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு புகார் தெரிவித்தார்.



 

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக தனது சமூகவலைதள பக்கங்களில், ஊபர் ஆட்டோ நிறுவனத்தை மற்றும் காவல் துறையினரை tag செய்து புகார்  பதிவு செய்திருந்தார். இதுதொடர்பாக அந்தப் பெண் பதிவு செய்திருந்த  பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பலர் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறையினரை tag செய்து தொடர்ந்து பதிவு செய்து வந்தனர்.



 

இதனை அடுத்து இந்த பதிவு சம்பந்தப்பட்ட ஊபர் நிறுவனம் கவனத்திற்கு சென்றது, ஊபர் நிறுவனமே ஆட்டோ ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுப்பதாக மாணவியின் ட்விட்டர் பதிவுக்கு கமெண்டில் கருத்து தெரிவித்துள்ளது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணக்கில் காவல்துறையினரும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்தனர்.  தாம்பரம் காவல் ஆணையரகத்தின் ட்விட்டர் பதிவில், ஆட்டோ ஓட்டுநர் மீது செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆட்டோ ஓட்டுநரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். தற்பொழுது காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பலரும் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்