இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்காவால் நிறுத்த முடியும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. கிட்டதட்ட ஒரு மாதத்தை கடந்த இந்த போரால் கடுமையான பாதிப்புகளை உலக நாடுகள் சந்தித்து வருகிறது. குறிப்பாக உலக நாடுகளின் எரிபொருள் வழிபாதையாக அறியப்படும் ஹோர்முஸ் ஜலசந்தியை போர் காரணமாக ஈரான் மூடியுள்ளதால் பல நாடுகள் எரிபொருள் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எரிசக்தி விநியோகத்தைச் சீர்குலைத்து உலகப் பொருளாதாரத்தை உலுக்கியுள்ள போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு ஒப்பந்தம் அவசியமில்லை என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஈரான் தரப்பில் போரை நிறுத்த ஒப்பந்தம் போட விரும்புகிறது என ட்ரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால் ட்ரம்பின் அறிவிப்பு ராஜதந்திர முன்னெடுப்பு என்றும், எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
இப்படியான நிலையில் தான் போரை 2-3 வாரங்களில் முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான தகவலை ட்ரம்ப் தெரிவித்துள்ளார் அவர்களால் அணு ஆயுதத்தைக் கண்டுபிடிக்க முடியாது என்று நாங்கள் உணரும்போது, நாங்கள் வெளியேறிவிடுவோம் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய வெளியுறவுக் கொள்கை நிபுணரான டிரிட்டா பார்சி, ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற ஒரு மோதலில் இருந்து டிரம்ப் அவ்வளவு எளிதாக வெளியேறிவிட முடியாது என்றும், இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை ஈரான் மற்றும் லெபனானில் நிகழ்ந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
முதலில் இந்தப் போர் நான்கு நாட்களில் முடிந்துவிடும் என்று சொன்னார்கள். பின்னர் மூன்று வாரங்கள் ஆகும் என்று சொன்னார்கள். இப்போது இன்னும் இரண்டு முதல் மூன்று வாரங்களில் முடியும் என சொல்கிறார். இந்தப் போர் இனி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால், காலக்கெடு நீட்டிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது” என்று டிரிட்டா பார்சி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் போரை நிறுத்தாவிட்டால் அது பேரழிவுக்கு வழிவகுக்கும் என்ற ட்ரம்ப் எச்சரித்திருந்தார். அப்படியான சூழலில் அவர் ஏப்ரல் 1 ஆம் தேதியான இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் ஈரான் போரில் அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த சமீபத்திய தகவல்களை அவர் பகிர்ந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
