வடக்கு சைப்ரஸ் நாட்டில் IVF சிகிச்சை மையங்களில் நடந்த கோளாறு காரணமாக குழந்தைகள் பிறப்பில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாடுகள் எழுந்துள்ளது.
குழந்தை பிறப்பு என்பது பல்வேறு சூழல் காரணமாக இன்றைய காலக்கட்டத்தில் சிலருக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. உடல் ரீதியான மாற்றம் தொடங்கி உணவுகள், சுற்றுச்சூழல் போன்றவையும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் பலரும் செயற்கை கருவுறுதல் சிசிச்சை முறையை மேற்கொள்கின்றனர். உடலுறவு கொள்ளாமல் பெண்ணின் கருப்பையில் விந்தணுவை நேரடியாக செலுத்தி கருத்தரிக்க செய்யும் முறையும் இதில் உள்ளது. அதேசமயம் சம்பந்தப்பட்ட ஆணின் விந்தணு அல்லது பெண்ணின் கருமுட்டையை பயன்படுத்தி தானம் செய்பவர்களின் விந்தணு அல்லது கருமுட்டை மூலம் குழந்தையை கருத்தரிக்க செயல்முறையும் சிகிச்சையில் உள்ளது.
திரும்பும் திசையெங்கும் தனியார் கருத்தரித்தல் மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் இதில் சில நேரங்களில் குழப்பங்களும் ஏற்படும். அப்படியான ஒரு சம்பவம் ஒன்று தான் வடக்கு சைப்ரஸ் நாட்டில் நடைபெற்றுள்ளது.
லாரா மற்றும் பெத் என்ற தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இதனால் அவர்கள் இரண்டு குழந்தைகள் வேண்டும் என எண்ணினர். அதற்காக IVF எனப்படும் சிகிச்சையை மேற்கொண்டனர். இது கருப்பைகளிலிருந்து கருமுட்டைகள் எடுக்கப்பட்டு, ஆய்வகத்தில் விந்தணுக்களால் கருவுறச் செய்யப்படும் ஒரு சிகிச்சையாகும். இப்படியாக அவர்களுக்கு கேட் என்ற பெண் குழந்தை பிறந்தது. தம்பதியினர் மகிழ்ச்சியடைந்தனர். தொடர்ந்து இரண்டாவதாக ஜேம்ஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
ஆனால் காலப்போக்கில் ஜேம்ஸின் உடல்மொழி, நடவடிக்கை, நிறம் ஆகியவற்றில் அடுத்தடுத்து மாற்றங்கள் ஏற்படுவதை லாரா மற்றும் பெத் கண்டறிந்தனர். இது அவர்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தவே சம்பந்தப்பட்ட சிகிச்சை மையத்தை தொடர்பு கொண்டு விவரம் கேட்டுள்ளனர்.
இரு குழந்தைகளின் செயல்முறையும் வித்தியாசமாக இருப்பதால் டி.என்.ஏ பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். அதனுடைய முடிவுகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கும் ஒன்றாக மாறியுள்ளது. அதாவது இரு குழந்தைகளுக்கும் மரபணு ரீதியாக எந்தத் தொடர்பும் இல்லை என்பதும், உயிரியல் ரீதியாகத் தொடர்புடையவர்கள் அல்ல என்பது தெரிய வந்தது. இரண்டு வெவ்வேறு விந்தணுக் கொடையாளிகள் இந்த சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இது லாரா மற்றும் பெத் தம்பதியினருக்கு மிகப்பெரிய அளவில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் குழந்தைகளின் அடையாளம் மற்றும் உடல்நலத்திற்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. இந்த விந்தணுக்கள் புகழ்பெற்ற டேனிஷ் விந்தணு வங்கியிலிருந்து பெறப்படும் என சிகிச்சை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் யாருமே இந்த விஷயத்தில் பொறுப்பேடுத்துக் கொள்ள மறுப்பது மன உளைச்சலை உண்டாக்கியுள்ளதாக தம்பதியினர் தெரிவித்துள்ளனர். இதுபோன்று ஏழு குழந்தைகள் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
