இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. ஈரானில் இஸ்ரேல் பெரும் சேதங்களை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஈரான் பதில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கொத்து குண்டுகளை இஸ்ரேலின் குடியிருப்புப் பகுதியில் வீசியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொத்து குண்டு(Cluster Bomb) என்றால் என்ன.?
கிளஸ்டர் குண்டுகள் அல்லது கிளஸ்டர் வெடிமருந்துகள் என்று அழைக்கப்படும் இந்த வகை குண்டுகள், இலக்கை சென்று தாக்குவதற்கு முன், பரந்த பகுதியில் உபகுண்டுகளை வீசிவிடும்.
அந்த உப குண்டுகள், தரையில் விழுந்த உடனோ, அல்லது சிறிது நேரத்திற்குப் பின்னரே வெடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. ஆனால், சில நேரங்களில் அவற்றில் பல குண்டுகள் வெடிக்காமல் கூட போகும்.
ஆனால், அதில் சில சிக்கல்களும் உள்ளன. கீழே விழும் சில குண்டுகள் வெடிக்காவிட்டாலும், அவை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற நிலையிலேயே இருக்கும். அதற்கு கால நேரமே கிடையாது. சில குண்டுகள் வருடக்கணக்கில் கூட வெடிக்காமல் அப்படியே இருக்கும். ஆனால், அது வெடிக்கவும் செய்யலாம் என்பதால், அவை பொதுமக்களுக்கு பெரிய ஆபத்தாகவே கருதப்படுகிறது.
இந்த குண்டுகளை, விமானங்களில் இருந்தும் ஏவலாம் அல்லது தரையிலிருந்தும் நேரடியாக ஏவலாம். பல கால்பந்து மைதானங்களை ஒன்று சேர்த்தால் எவ்வளவு பரப்பளவு வருமோ, அந்த அளவிற்கான சேதத்தை இந்த குண்டுகள் ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை.
அவை தடை செய்யப்பட்டது எதனால்.?
2008-ம் ஆண்டு நடந்த கிளஸ்டர் வெடிகுண்டுகள் குறித்த மாநாட்டில் எடுக்கப்பட்ட இந்த வகை குண்டுகளின் தடைக்கான முடிவு, 2010-ம் ஆண்டில் அமலானது. அதன்படி, அதை பயன்படுத்தவோ, வடிவமைக்கவோ, தயாரிக்கவோ, வாங்குவதற்கோ, விற்பதற்கோ தடை விதிக்கப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தில், 111 நாடுகள் மற்றும் 12 பிற நிறுவனங்களும் கையெழுத்திட்டன. ஆனால், இஸ்ரேல், ஈரான், அமெரிக்கா, ரஷ்யா, சினா, இந்தியா ஆகிய முக்கிய நாடுகள் அந்த ஒப்பந்தத்தில் இணையவில்லை. உலகளாவிய அந்த ஒப்பந்தத்தின் கீழ் கையெழுத்திட்ட நாடுகளில் கையிருப்பில் இருந்த 99 சதவீத கிளஸ்டர் குண்டுகள் அழிக்கப்பட்டுவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்திய நாடுகள் எவை.?
கடந்த 2006-ம் ஆண்டு, லெபனான் போரின்போது, இஸ்ரேல் இந்த கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்றுவரும் ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரிலும் இந்த கிளஸ்டர் குண்டுகளை இரு நாடுகளுமே பயன்படுத்தி வருகின்றன.
கடந்த 2023-ம் ஆண்டு சர்ச்சைகளுக்கு நடுவே, உக்ரைனுக்கு அமெரிக்கா இந்த குண்டுகளை விற்றுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது, ஈரான் கிளஸ்டர் குண்டுகளை இஸ்ரேல் மீது வீசியுள்ளதை, அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுபோன்ற சர்ச்சைக்குரிய ஆயுதங்களை பயன்படுத்துவது, கடைசியில் பொதுமக்களையே பாதிக்கிறது. அதனால், இந்த போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதே, மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.