Ind Pak Op Sindoor: ஆப்ரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை இந்தியா அடுத்தடுத்து தாக்கியுள்ளது.
இந்தியாவின் அடுத்தடுத்த பதிலடி:
இந்தியாவின் அடுத்தடுத்த தாக்குதல்களால் போர் நிறுத்தத்தை கோர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக, பாகிஸ்தான் துணை பிரதமர் இஷக் தார் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக இந்தியா முன்னெடுத்த ஆப்ரேஷன் சிந்தூரில், ராவல்பிண்டி மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் அடுத்தடுத்து தாக்கப்பட்டதே, போர் நிறுத்த முடிவுக்கு காரணம் எனவும் விளக்கமளித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளம் மற்றும் பஞ்சாபில் உள்ள ஷோர்கோட் ஏர்பேஸ் இரண்டுமே இந்தியாவால் தாக்கப்பட்டதாகவும், அந்த சூழலில் தான் இந்த விவகாரத்தில் தலையிடும்படி அமெரிக்காவை நாடியதாகவும், சவுதி அரேபியாவின் உதவியை கோரியதாகவும் பாகிஸ்தான் துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.
நூர்கான் விமானப்படை தளம் என்பது பாகிஸ்தான் ராணுவத்தின் மிகவும் முக்கியமான தளம் ஆகும். அங்கிருந்து விமானப்படை விமானங்கள் இயக்கப்படுவதோடு, விஐபி-க்களின் பயணமும் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவிடம் சரணடைந்தது எப்படி?
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய இஷக் தார், “துரதிருஷ்டவசமாக அதிகாலை 2.30 மணியளவில் இந்தியா மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. நூர் கான் ஏர்பேஸ் மற்றும் ஷோர்கோட் ஏர் பேஸ்களை தாக்கினர். அடுத்த 45 நிமிடங்களில் சவுதி இளவரசர் ஃபைசல் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டார். அவரிடம், நான் ஏற்கனவே அமெரிக்க உள்துறை அமைச்சரிடம் பேசியிருந்ததை தெரிவித்தேன். தொடர்ந்து, இந்தியா தாக்குதல்களை நிறுத்தினால் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்த தயாராக உள்ளது என்பதை, ஜெய்சங்கரிடம் தெரிவிக்கவா என ஃபைசல் கேட்டார். நான் அதற்கு ஒப்புக்கொள்ளவே, போர் நிறுத்த விவகாரத்தை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தெரியப்படுத்தினார்” பாகிஸ்தான் துணை பிரதமர் தெரிவித்தார்.
ஆப்ரேஷன் சிந்தூர்:
கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு & காஷ்மீரில் அத்துமீறி நுழைந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில், மே 7 மற்றும் 8ம் தேதிகளில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்து, போர் உருவாகும் சூழல் ஏற்பட்டது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு, இந்தியா சார்பிலிருந்து வலுவான பதிலடிகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த சூழலில் தான் ஏற்கனவே இருநாடுகளுடனும் தொடர்பில் இருந்த அமெரிக்கா, தாமதமின்றி உடனடியாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பதற்றத்தை தணிக்கும்படி பாகிஸ்தானிற்கு நடைமுறை உத்தரவை இட்டதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, 10ம் தேதி இருநாடுகளும் தாக்குதலை கைவிடுவதாக அறிவித்தனர்.