ஈரானில் குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரைச் சேர்ந்த 22 வயதான மாஷா அமினி என்ற பெண் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி தனது குடும்பத்துடன் தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார். அப்போது ஈரானில் உடை தொடர்பான நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்தும் நெறிமுறை காவல்துறை பிரிவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது.
அந்த நேரத்தில், நெறிமுறை காவல்துறை பிரிவு மாஷா அமினியின் குடும்பத்தை வழிமறித்து சோதனை மேற்கொண்டுள்ளது. அப்போது அமினி ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி அவரை கைது செய்து காவல்துறையினர் கொடூரமாக தாக்கி வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.
காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றும் மாஷா பலத்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இதனால் வலிதாங்க முடியாத மாஷா அமினி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்று சோதனை மேற்கொண்டதில் மருத்துவர்கள் மாஷா கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் மாஷா உயிரிழந்தார். இந்த செய்தி அறிந்த பெண்கள் மாஷாவின் சொந்த ஊரான சஹிஸ் நகரில் ஒன்றாக திரண்டு போராட்டம் நடத்தினர். இது அங்கு மிக பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், போராட்டத்திற்கு ஆதரவாக இணையதளங்கள் முடக்கப்பட்டது.
அமினியை தவறாக நடத்தினார், அடித்தார்கள் என்ற குற்றச்சாட்டுகளை ஈரானிய அலுவலர்கள் மறுத்துள்ளனர். மேலும், ஏற்கனவே இருந்த அவரின் உடல் நிலைமையின் காரணமாக அவர் மரணித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவரது குடும்பத்தினர் இந்த கருத்துகளை மறுத்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, ஈரானிய பள்ளி மாணவிகள் போராட்ட களத்திற்கு சென்றுள்ளனர். நெறிமுறை காவல்துறையின் கொடூரமான அடக்குமுறையை எதிர்த்து, தங்கள் ஹிஜாப்களை அகற்றி, ஆங்காங்கே பேரணிகளை நடத்தி வருகின்றனர் பள்ளி மாணவிகள்.
இந்நிலையில், ஈரானின் பெண்கள் தலைமையிலான ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக டிஜிட்டல் ஆர்வலர்கள் அரசு தொலைக்காட்சி நேரடி செய்தி ஒளிபரப்பை ஹேக் செய்துள்ளனர். "எங்கள் இளைஞர்களின் ரத்தம் உங்கள் கைகளில் உள்ளது" என தொலைக்காட்சி திரையில் தோன்ற வைத்துள்ளனர் ஹைக்கர்கள்.
இதுபற்றிய செய்தி வெளியாகி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.