Pakistani killed in iran: ஈரான் நாட்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த 9 பேர் கொல்லப்பட்டதால், இருநாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் சிக்கலாகியுள்ளது.
9 பாகிஸ்தானியர்கள் கொலை:
ஈரானின் அமைதியான தென்கிழக்கு எல்லைப் பகுதியில் சனிக்கிழமையன்று அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய நபர்கள், ஒன்பது பாகிஸ்தானிய தொழிலாளர்களை கொலை செய்துள்ளனர். சரியாக, ஒரு வாரத்திற்கு முன்பு அண்டை நாடுகளான இரண்டும் மாறி மாறி ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டன. இதில் இரண்டு குழந்தைகள் உட்பட 12 பேர் வரை கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பதற்றம் முழுமையாக தனிவதற்குள்ளாகவே, ஈரானில் பாகிஸ்தானியர்கள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பேசியுள்ள வெளியுறவு அமைச்சகம், “அண்டை நாட்டில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கொடூரமான மற்றும் வெறுக்கத்தக்க கொலைகள் தொடர்பாக ஈரானிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம்” என தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் அதிர்ச்சி:
ஈரானின் மெஹர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில், சரவன் நகரின் சிர்கான் சுற்றுப்புறத்தில் உள்ள ஒரு வீட்டில் அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நபர்கள், ஈரானியர் அல்லாத 9 பேரைக் கொன்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிய உள்துறை அமைச்சர் அஹ்மத் வஹிடியும் இறந்தவர்கள் அனைவரும் "வெளிநாட்டினர்" என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், ஈரானுக்கான பாகிஸ்தான் தூதர் முதாசிர் திப்பு, கொல்லப்பட்ட அனைவரும் பாகிஸ்தானியர்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யார் இந்த 9 பேர்?
பலுச் உரிமைகள் குழுவான ஹால்வாஷ் தனது இணையதளத்தில், பலியானவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்றும், அவர்கள் வாகன பழுதுபார்க்கும் கடையில் வேலைபார்த்து அங்கேயே வசிப்பவர்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்டனமும் - அதிகரிக்கும் பதற்றமும்:
9 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, “இது ஒரு பயங்கரமான மற்றும் வெறுக்கத்தக்க சம்பவம். நாங்கள் அதை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம். ஈரானிய அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம், இந்த சம்பவத்தை உடனடியாக விசாரணை செய்து, இந்த கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தி தண்டன பெற்று தர வலியுறுத்தியுள்ளோம். இதுபோன்ற கோழைத்தனமான தாக்குதல்களால், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கான உறுதியிலிருந்து பாகிஸ்தானைத் தடுக்க முடியாது” என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சரியாக ஒரு வாரத்திற்கு முன்பாக இரண்டு நாடுகளும் திடீரென ஏவுகணை தாக்குதல்களை நடத்தின. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஈரான் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், அந்த பிரச்னை முடிவுக்கு வந்ததாக கருதப்பட்ட நிலையில், 9 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.