Cuddalore Train accident: கடலூர் ரயில் விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழந்த நிலையில், ரயில்வே கேட்களை இண்டர் லாக்கிங் முறைக்கு மாற்றவும் மத்திய அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் ரயில் விபத்து: பள்ளி மாணவர்கள் பலி
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் பூட்டப்படமால் இருந்த ரயில்வே கேட் பகுதியை, கடக்க முயன்ற பள்ளி பேருந்தின் மீது ரயில் மோதிய கோர விபத்து கடந்த 8ம் தேதி நிகழ்ந்தது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் உட்பட 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி எடுத்தது. இதற்கு மொழி தெரியாத ஊழியர்கள், இண்டர்லாக்கிங் தொழில்நுட்பம் இல்லாத ரயில்வே கேட் போன்றவை தான் காரணங்கள் என பல குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன. இந்நிலையில் தான் ரயில்வே கேட் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான அறிவுறுத்தல்களை ரயில்வே அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.
ரயில்வே கேட் - பாதுகாப்பு நடவடிக்கைகள்:
அமைச்சர் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி,
- அனைத்து லெவல் கிராசிங்களிலும் சிசிடிவி கேமராக்கள், தேவையான ரிகார்டிங் வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்
- சிசிடிவி கேமராக்களுக்கான மின்சாரம் தடையின்றி விநியோகிக்கப்பட வேண்டும். இதற்காக கூடுதல் வசதியாக சோலார் பேனல்கள், பேட்டரி பேக்-அப், யு.பி.எஸ் போன்ற கட்டமைப்பும் ஏற்படுத்தப்படும்
- இண்டர்லாக்கிங் தொழில்நுட்ப வசதி அமைப்பதற்கான ஒரு லெவல் கிராசிங்கின் பயணிகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக அளவிலான லெவல் கிராசிங்குகளில் இண்டர்லாக்கிங் வசதி ஏற்படுத்தப்படும்
- இண்டர்லாக்கிங் தொழில்நுட்பத்தின் கீழ் மாற்றப்படாத கேட்கள் தினசரி ஆய்வு செய்யப்பட வேண்டும்
- இண்டர்லாக்கிங் இல்லாத பகுதிகளில் ரயில் வருவதை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க வேண்டும்
- பொதுமக்களே மூடி திறக்கும் ரயில்வே கேட்களை கண்டறிந்து கணக்கெடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இண்டர்லாக்கிங் சிஸ்டம் என்றால் என்ன?
இண்டர்லாக் சிஸ்டம் இல்லாத லெவல் கிராசிங் பகுதிகளில், ரயில் நிலைய மாஸ்டரின் திசையில் பச்சை சிக்னல் காட்டப்படுகிறது. இதன் காரணமாக, பல நேரங்களில் லெவல் கிராசிங் கேட் மூடாத சூழலிலும் ரயில் நகரத் தொடங்குகிறது. இதனால், விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. ஆனால், இண்டர்லாக் சிஸ்டம் அமைக்கப்பட்ட பிறகு, லெவல் கிராசிங் கேட்டை மூடாவிட்டால் ரயிலுக்கு பச்சை சிக்னல் கிடைக்காது.அந்த லாக் விழுந்தால் மட்டுமே ரயில் முன்னேறி செல்வதற்கான பச்சை சிக்னல் கிடைக்கும். இதனால் ரயில் வரும் நேரங்களில் ஆபத்தான முறையில் பொதுமக்கள், ரயில்வே கேட்களை கடக்கும் சூழல் வெகுவாக குறைக்கப்படும். விபத்துகளும் தவிர்க்கப்படும்.
இதனிடையே, விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்பட்டால் தான், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா? முன்கூட்டியே ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுக்காதா? என்றும் பொதுமக்கள் கேல்வி எழுப்புகின்றனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் ஏற்கனவே செயல்வடிவம் பெற்று இருந்தால், அநியாயமாக 3 குழந்தைகள் உயிரிழந்து இருக்க மாட்டார்களே என்பதே பொதுமக்களின் வேதனை கலந்த கேள்வியாக உள்ளது.