மேற்காசியாவில் அமைந்துள்ள காசா பகுதியில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போர் உலகம் முழுவதும் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி போர் தொடங்கியதில் இருந்தே மத்திய கிழக்கு நாடுகளில் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது.


மேற்காசியாவில் இருந்து தெற்காசியாவுக்கு பரவும் போர்:


குறிப்பாக, ஈரான் ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போரால் காசா பகுதியில் 24,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில், பெரும்பாலானோர் குழந்தைகளும் பெண்களுமே ஆவர். காசா போரில் தலையிட மாட்டோம் என ஈரான் கூறி வந்தாலும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீதும் அதன் நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.


இஸ்ரேல் படைகளுடன் லெபனான் நாட்டை சேர்ந்த ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா இயக்கமும் சண்டையிட்டு வருகிறது. ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க படைகள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. அதுமட்டும் இன்றி செங்கடல் பகுதியில் உள்ள கப்பல்கள் மீது ஈரான் ஆதரவு ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு தாக்குதல் நடத்தியுள்ளது.


இந்த நிலையில், மேற்காசியாவில் இருந்து தெற்காசியாவுக்கு போர் விரிவடைந்துள்ளது. பாகிஸ்தானில் ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ஷ் அல்-அட்ல் தீவிரவாத குழுவுக்கு தொடர்புடைய இரண்டு இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. 


பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல் நடத்த காரணம் என்ன?


ஒரே வாரத்தில் ஈராக், சிரியாவை தொடர்ந்து மூன்றாவது நாட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான். இந்த தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் மூன்று பேர் காயம் அடைந்திருப்பதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. சட்ட விரோத நடவடிக்கையில் ஈரான் ஈடுபட்டிருப்பதாகவும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடம் என்றும் பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.


பாகிஸ்தான் வான்வெளியில் அத்துமீறி நுழைந்திருப்பதாக கடுமையாக கண்டித்துள்ளது பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம். ஈரான் அரசிடம் தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ள பாகிஸ்தான், இதை ஏற்று கொள்ளவே முடியாது என விமர்சித்துள்ளது. பேச்சுவார்த்தை நடத்த பல வழிகள் இருந்த போதிலும் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது பெரும் கவலை அளிப்பதாக கூறியுள்ளது.


தங்களின் பாதுகாப்பை மீறி செயல்பட்டவர்களை தண்டிக்கும் நோக்கில் தாக்குதல் நடத்தி இருப்பதாக ஈரான் விளக்கம் அளித்துள்ளது. பாகிஸ்தான், ஈரான் எல்லையில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தாக்குதல் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் இரண்டு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் என சீனா அறிவுறுத்தியுள்ளது.