உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக திகழ்வது அமெரிக்கா. பல நாடுகளின் பொருளாதாரமும் அமெரிக்காவைச் சார்ந்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக அந்த நாட்டின் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். இந்த நிலையில், அவர் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இது அந்த நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் அடுத்தாண்டு நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அமெரிக்க அதிபரான ஜோ பைடன், எதிர்வரும் தேர்தலும் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். ஜனநாயக கட்சியின் சார்பின் ராபர்ட் கென்னடி, மரியான் வில்லியம்சன் ஆகியோரும் வேட்பாளர் போட்டியில் களம் இறங்க உள்ளனர்.
அதே போலவே, குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிர்ம்ப் போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்தார். துணை அதிபர் மைக் பென்ஸ் உள்ளிட்டோரும் அதிபர் வேட்பாளராக களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினரான நிக்கி ஹேலி, விவேக் ராமசாமி ஆகியோரும் வேட்பாளர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. சொந்த கட்சியில் யாருக்கு அதிக ஆதரவு கிடைக்கிறதோ அவர் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார். இதுவே வழக்கமாகும்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். அவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், ஓர் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாகதெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய விவேக் ராமசாமி, “அடுத்த ஜனாதிபதியாக நான் வருவதற்கு எந்தப் பாதையும் இல்லை. இந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை நாங்கள் இடைநிறுத்தப் போகிறோம். நான் டொனால்ட் டிரம்பை அழைத்து, வாழ்த்து தெரிவித்தேன். ஜனாதிபதி தேர்தலில் எனது ஆதரவு டிரம்பிற்கு இருக்கும். மேலும் இந்த நாட்டிற்கு நாங்கள் சரியானதைச் செய்யப் போகிறோம் என்று நான் நினைக்கிறேன். அதனால் எனது இந்த முடிவை ஆதரிக்க கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
38 வயதான விவேக் ராமசாமி ஒஹாயோவில் பிறந்தவர். இவரது பெற்றோர் தென்னிந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேறியவர்கள். விவேக் ராமசாமியின் தேர்தல் பிரச்சாரம் டிரம்ப்புக்கான உறுதியான ஆதரவால் குறிக்கப்பட்டது - குடியரசுக் கட்சி அரசியலில் அவரது முக்கியத்துவத்திற்கு பங்களித்தது என்பது குறிப்பிடத்தக்கது.