ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், ஹிஜாப் இன்றி இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்ட பிரபல நடிகையை காவல்துறை கைது செய்துள்ளது. 


ஈரானில் இஸ்லாமிய மதகுரு இப்ராஹிம் ரைசி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், உடை கட்டுப்பாட்டை கண்காணித்து வரும் அறநெறி காவல்துறையால் ஹிஜாப் அணியவில்லை எனக் கூறி குர்திஷ் வம்சாவளியைச் சேர்ந்த 22 வயது பெண் மஹ்சா அமினி கைது செய்யப்பட்டார்.


காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தபோதே அவர் உயிரிழந்தார். காவல்துறை தாக்கியதில் அவர் உயிரிழந்தாகக் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, அவரது மரணம் நாடு முழுவதும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இந்த போராட்டங்கள் தற்போது உலகையே உலுக்கி வருகிறது.


இந்த அமைதி வழி போராட்டங்களை கலவரம் எனக் கூறிய இஸ்லாமிய குடியரசான ஈரான் அதை ஒடுக்க முயற்சித்து வருகிறது. மேலும், மேற்குலக நாடுகளின் தூண்டுதலின் பேரில் இந்த போராட்டங்கள் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளன.


இதற்கு மத்தியில், போராட்டங்களை ஒடுக்கும் போக்குக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பிரபல நடிகை ஹெங்காமே காசியானி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கலவரத்தை தூண்டியதாகவும் ஊக்குவித்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


முன்னதாக, ஹிஜாப் இன்றி இன்ஸ்டாவில் அவர் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இதைதொடர்ந்து, அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. "ஒருவேளை இதுவே எனது கடைசி பதிவாக இருக்கலாம்" என ஞாயிற்றுக்கிழமை அவர் பதிவிட்டிருந்தார்.


"இந்த தருணத்திலிருந்து, எனக்கு என்ன நடந்தாலும், நான் எப்போதும் போல, எனது கடைசி மூச்சு வரை ஈரானிய மக்களுடன் இருப்பேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்" என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.


இந்த வீடியோ ஷாப்பிங் தெருவில் எடுக்கப்பட்டது போல தெரிகிறது. கேமரா முன்பு ஹிஜாப் இன்றி தோன்றும் ஹெங்காமே காசியானி, வீடியோவில் ஒரு வார்த்தை கூட பேசாமல், தனது முடியை குதிரைவால் போட்டு கட்டுகிறார்.


கடந்த வாரம், அவர் வெளியிட்ட பதிவில், ஈரானிய அரசை குழந்தைகளை கொல்லும் அரசு என குறிப்பிட்டிருந்தார். 50க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொன்றதாக குற்றம்சாட்டியுள்ளார். சமூக வலைதளங்களில் மக்களை தூண்டும் வகையில் பதிவிட்ட எட்டு பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக இணைய செய்தி நிறுவனம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்மன் அனுப்பப்பட்டவர்களில் ஈரான் கால்பந்து அணியான பெர்செபோலிஸ் பயிற்சியாளரான யஹ்யா கோல்மொஹம்மதியும் அடங்குவார். அவர் ஈரானின் தேசிய அணியில் உள்ள வீரர்களை "ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை அதிகாரிகளின் காதுகளுக்கு கொண்டு செல்லவில்லை" என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.