22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன்,  கோலாகல கொண்டாட்டத்துடன் கத்தாரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டிகளை நேரில் காண பல்வேறு நாடுகளில் இருந்தும் லட்கக்கணக்கான ரசிகர்கள் வந்து குவிந்துள்ளதால்,  கத்தார் நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. வெளிநாட்டு மக்களின் வருகையால் அங்குள்ள விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிய, திறந்த வெளியில் தற்காலிக கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. உணவகங்கள் போன்ற வியாபாரமும் சூடுபிடிக்க, வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


1.5 கோடி முட்டைகள் ஏற்றுமதி:


நாமக்கல்லில் இருந்து  அதிகளவில் முட்டை ஏற்றுமதியாகும் நாடுகளில் கத்தாரும் ஒன்று. தற்போது, அங்கு உலக கோப்பை கால்பந்து திருவிழா நடைபெறுவதால், இறக்குமதி செய்யப்படும் முட்டை போன்ற உணவுப் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.  இதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கத்தாருக்கு 1.50 கோடி முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப கூடுதல் முட்டைகளை அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


உக்ரைன் போரின் தாக்கம்: 


கத்தார் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிடம் இருந்து வழக்கமான வாங்கும் அளவை காட்டிலும் கூடுதல் முட்டைகளை வாங்க உக்ரைன் - ரஷ்யா போர் முக்கிய காரணமாக மாறியுள்ளது.  போரின் தாக்கத்தால் சர்வதேச சந்தையில் கோழித் தீவனம் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால்,  முட்டை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் துருக்கி போன்ற நாடுகள் விலையை உயர்த்தியுள்ளன. குறிப்பாக, துருக்கியில் 360 முட்டைகள் கொண்ட ஒரு பெட்டியின் விலை சராசரியாக ரூ.1,635-லிருந்து ரூ.2,944 ஆக உயர்ந்துள்ளது. அதை விட குறைந்த விலையில் நாமக்கல்லில் முட்டை கிடைப்பதால்,  ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன் போன்ற நாடுகள் நாமக்கல்லில் இருந்து அதிகளவில் முட்டைகளை வாங்க தொடங்கியுள்ளன. குறிப்பாக, மாதந்தோறும் கத்தாருக்கு மட்டும் நாமக்கல்லில் இருந்து 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக 1.50 கோடியாக அதிகரித்துள்ளது.






பீருக்காக முழக்கமிட்ட ரசிகர்கள்:


இதனிடையே, கத்தார் அரசின் தீவிர கட்டுப்பாடுகள் காரணமாக, உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெறும் 8 விளையாட்டு மைதானங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் பீர் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கத்தார் மற்றும் ஈகுவடார் அணிகளுக்கு இடையேயான தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. அப்போது, ஈகுவடாரை சேர்ந்த ரசிகர்கள் ஏராளமானோர் தங்களுக்கு பீர் வேண்டும் எனக்கோரி மைதானத்திலேயே முழக்கங்களை எழுப்பினர்.